லக்னோ: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி கைதான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி தாராபுரியின் வீட்டுக்கு சென்ற போது, போலீசார் தன்னை தடுத்து நிறுத்து, கழுத்தை நெரித்து கீழே தள்ளி அராஜகம் செய்ததாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். உத்தரப்பிரதே மாநிலம் லக்னோவில் நடந்த கட்சி நிறுவன நிகழ்ச்சியில் நேற்று பங்கேற்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் கைதான முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.ஆர். தாராபுரியின் (வயது 76) குடும்பத்தினரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். நடந்தே சென்றார்: ஆனால் திடீரென நடுவழியில் பிரியங்காவை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் காரில் இருந்து இறங்கி சில கிமீ தூரம் வரை நடந்தே சென்றார். ஒருகட்டத்தில், இரு சக்கர வாகனம் ஒன்றின் பின்புறத்தில் ஏறி அமர்ந்தபடியும் அவர் தொடர்ந்து சென்றார். பின்னர், பிரியங்கா அளித்த பேட்டியில், நடந்து சென்ற போது தன்னை பெண் போலீசார் தாக்கியதாக பிரியங்கா பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தி உள்ளார்.
