சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி மாற்றுத்திறனாளி சைக்கிளில் விழிப்புணர்வு பயணம்

திருப்பத்தூர் :  சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி மாற்றுத்திறனாளி சைக்கிளில் கன்னியாகுமரி-சென்னை வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டார். இவர் நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வந்தடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(45). இவர் சிறு வயதில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் கால் இழந்தவர். பட்டப்படிப்பு முடித்த இவர் சமூக சேவகராக பணியாற்றி வருகிறார். மேலும் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு போதை தடுப்பு, மரம் வளர்த்தல், சுகாதாரம், காற்று மாசுபடுதல் குறித்து சைக்கிளில் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வுஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் டெல்லி, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசடைந்துள்ளது. இதனால், ஏற்படும் விளைவுகள் குறித்தும், காற்று மாசுபடுவதை தடுக்க மரம் வளர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கன்னியாகுமரி-சென்னை வரை விழிப்புணர்வு ஏற்படுத்த சைக்கிள் பயணத்தை கடந்த 13ம் தேதி தொடங்கினார். இந்நிலையில், நேற்று இவர் திருப்பத்தூர் மாவட்டம் வந்தடைந்தார். காற்று மாசடைவதை தடுக்க தனது ஒற்றைக்காலில் சைக்கிளை மிதித்து கொண்டு கன்னியாகுமரி முதல் சென்னை வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளிக்கு திருப்பத்தூர் மாவட்ட மக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, விழிப்புணர்வு பயணம் வரும் ஜனவரி 1ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் முடிவடைகிறது. அங்கு நதிநீர் இணைப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்று நடுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை விவசாயம் உட்பட பல்வேறு விழிப்புணர்வுகளை பொதுமக்களிடம் ஏற்படுத்த உள்ளார்.

Related Stories: