உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலகலம்: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

சென்னை: இயேசு கிறிஸ்து பிறந்த தினமான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகமெங்கும் வண்ணமயமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் சாந்தோம், சின்னமலை, பெசன்ட்நகர் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களும் மின்னொளியில் ஜொலித்தன. நள்ளிரவில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று குழந்தை இயேசுவை வழிப்பட்டனர். சென்னையை அடுத்த மதுராந்தகம் அருகே உள்ள அச்சிறுப்பாக்கத்தில் மலை மேல் உள்ள தேவாலயம் வண்ண விளக்குகளால் ஜொலித்தது. சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தூய ஆரோக்கியநாதர் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகம, மராட்டியம் உள்ளிட்ட வெளிமாநில கிறிஸ்தவர்களும் பங்கேற்றனர். அப்போது பேராலய அதிபர் கிறிஸ்துமஸ் தின நற்செய்தியை வாசித்தார். நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியர் பேராலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் புத்தாடை அணிந்து கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தில் விதவிதமான அலங்காரங்களில் கிறிஸ்துமஸ் வாகனங்கள் கண்ணை கவர்ந்தன.

புதுச்சேரியில் கொண்டாட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்காலில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. புதுச்சேரியில் பிரெஞ்ச் மொழி பேசும் மக்கள் அதிகம் வசிப்பதால் அங்கு தமிழ் மட்டுமின்றி பிரெஞ்ச் மொழியிலும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

கேரளாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கக்கூடிய கேரள மாநிலத்தில் திரும்பு திசையெல்லாம் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இரவு தேவாலயங்கள் மின் விளக்குகளால் ஜொலித்தன. மக்கள் ஆங்காங்கே உள்ள தேவாலயங்களுக்கு சென்று நள்ளிரவில் சிறப்பு திருப்பலி, மற்றும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.

இந்தியா முழுவதும் கொண்டாட்டம்

ஆந்திரா, தெலுங்கானா, கொல்கத்தா, மராட்டியம், கோவா, கர்நாடகா, உத்தரபிரதேசம், இமாச்சலபிரதேசம், மற்றும் தலைநகர் டெல்லியிலும் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் தங்களது வீடுகளில் குடில்களை அமைத்து குழந்தை இயேசுவை வழிப்பட்டு வருகின்றனர்.

வாடிகனில் உற்சாகம்

வாடிகன், பெத்தலகேம் உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கத்தோலிக்க கிறித்துவத்தின் தலைமையிடமாக விளங்கும் வாடிகனில் கிறிஸ்துமஸ் மரங்கள், குடில்கள் நிறைந்து அந்த நகரமே வண்ணமயமாக காட்சியளிக்கிறது. பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் குவிந்து கத்தோலிக்க மத குருவான போப்பாண்டவரின் சிறப்பு பிரார்த்தனை மற்றும் சிறப்பு திருப்பலியில் கலந்து கொண்டனர்.

Related Stories: