நமத்து போன நம்ம டாய்லெட்

பரமக்குடி :  பரமக்குடி பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள நம்ம டாய்லெட் திட்டம் நமத்து போனதால், சுகாதார சீர்கேட்டில் சிக்கி தவிப்பதால், பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிக அளவில் பணப்புழக்கம் உள்ள வணிக நகரமாக பரமக்குடி உள்ளது. இதனால் தினமும் ஏராளமான பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பரமக்குடி உழவர் சந்தைக்கும், தானிய மண்டிகள், அரிசி மண்டிகளுக்கும் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமங்களை சேர்ந்த  பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைபொருள்களை விற்பனை செய்து விட்டு செல்கின்றனர்.

இதுபோல் பொருள்களை வாங்கி செல்வதற்காக பரமக்குடிக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு பல்வேறு பணிகளுக்கு பரமக்குடி நகருக்கு வருபவர்களுக்கு, இயற்கை உபாதைகள் கழிக்க போதிய கழிப்பிட வசதிகள் இல்லாமல் உள்ளது. இதனால் இயற்கை உபாதை கழிக்க ஆளில்லா இடங்களை தேடி அலைய வேண்டிய நிலையில், நகராட்சி சார்பாக பேருந்து நிலையத்தில் நம்ம டாய்லெட் அமைக்கப்பட்டது. இதனை ஆடம்பரமாக திறந்து வைத்த நகராட்சி நிர்வாகம், தொடர்ந்து பராமரிப்பு இல்லாமல் திறக்கப்பட்ட இரண்டே மாதத்தில் சுகாதார சீர்கேட்டால் பயன்பாடின்றி உள்ளது. இங்கு முறையாக நம்ம டாய்லெட்டில் செப்டிக்டேங்க் கட்டாததால், திறந்த வெளியில் சாக்கடையில் விடப்பட்டுள்ளது.

இதனால் மாலை நேரங்களில் கொசு தொல்லையால் பயனிகளும், கடை வைத்திருப்பவர்கள் பகல் முழுவதும் மூக்கை பொத்திக்கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இதுபற்றி பரமக்குடி நகராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க கட்டப்பட்ட நம்ம டாய்லெட்டால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் இதனை சரி செய்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: