டாடா நிறுவனம் தொடர்பான தீர்ப்பில் ‘சட்டவிரோதம்’ வார்த்தையை நீக்க கோரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மனு: கம்பெனிகள் பதிவாளர் தாக்கல்

புதுடெல்லி: டாடா நிறுவனம் தொடர்பான தீர்ப்பில், சட்ட விரோதம் என்ற வார்த்தை உட்பட சிலவற்றை நீக்கக் கோரி, தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீடு தீர்ப்பாயத்தில் (என்சிஎல்ஏடி), கார்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் கம்பெனிகள் பதிவாளர் (ஆர்ஓசி) மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு அடுத்த மாதம் 2ம் தேதி விசாரணைக்கு வருகிறது. டாடா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்கிவிட்டு, அப்பதவியில் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டது செல்லாது என்றும் இதுதொடர்பான வழக்கை விசாரித்த தேசிய கம்பெனிகள் சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (என்சிஎல்ஏடி) கடந்த 18ம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்நிலையில் என்சிஎல்ஏடி-யில், கார்பரேட் விவகாரத்துறை அமைச்சகத்தின் கம்பெனிகள் பதிவாளர் (ஆர்ஓசி) நேற்று ஒரு மனுவை தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது: டாடா நிறுவனத்தை பொது நிறுவனத்திலிருந்து, தனியார் நிறுவனமாக மாற்றியதற்கு மதிப்பு அளிக்கும் வகையில், என்சிஎல்ஏடி தான் பிறப்பித்த உத்தரவில் ‘சட்டவிரோதம்’ என்ற வார்த்தையை நீக்க வேண்டும். கம்பெனிகள் சட்ட விதிமுறைகளின்படிதான், மும்பை ஆர்ஓசி இவ்வாறு மாற்றம் செய்தது என்பதை தெரிவிக்கும் வகையில், கடந்த 18ம் தேதி அளித்த தீர்ப்பில் தேவையான திருத்தத்தை செய்ய வேண்டும். டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு தேவையான உதவியை மும்பை ஆர்ஓசி அவசரமாக வழங்கியது என்ற அவதூறையும் நீக்க வேண்டும்.

ஆர்ஓசி நேர்மையான முறையில் செயல்பட்டுதான், டாடா நிறுவத்தின் அந்தஸ்தை மாற்றியது. என்சிஎல்டி (தேசிய கம்பெனிகள் சட்ட தீர்ப்பாயம்) கடந்த 2018 ஜூலை 9ம் தேதி அளித்த தீர்ப்ைப செயல்படுத்துவதற்கு, என்சிஎல்ஏடி எந்த தடையும் வழங்கவில்லை. இந்த வழக்கில் ஆர்ஓசியையும் ஒரு மனுதாரராக சேர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை அடுத்த மாதம் 2ம் தேதி விசாரணைக்கு பட்டியலிடும்படி என்சிஎல்ஏடி உத்தரவிட்டுள்ளது.

Related Stories: