ராமநாதபுரத்தில் அசத்தல் பாரத ரத்னா விருது வழங்கக்கோரி இளையராஜாவுக்கு 5 அடி உயர கேக் சிலை

சாயல்குடி : இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் அவருக்கு 5 அடி உயர கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது. இசைத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது. இதை வலியுறுத்தி ராமநாதபுரம், பாரதி நகர் ஐஸ்வர்யா பேக்கரி உரிமையாளர் சதீஷ், சுப்பு உள்ளிட்டோர், இளையராஜாவை பெருமைப்படுத்தும்விதமாக அவருக்கு 5 அடி உயர கேக் சிலை வைத்துள்ளனர். இதை ரசிகர்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

இதுகுறித்து பேக்கரி மேலாளர் சதீஷ் கூறுகையில், ‘‘இளையராஜா இசையில் அமைந்த பாடல்கள் காதல், தனிமை, ஏக்கம், சோகம், மகிழ்ச்சி, பயணம் என அனைத்து சூழ்நிலைக்கும் ஏற்றவாறு மக்களுடன் பின்னி பிணைந்துள்ளது. உரிய அங்கீகாரம், பாராட்டு மட்டும்தான் ஒரு கலைஞனுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. உலகத்தமிழர்களுக்கு பெருமை சேர்த்த இளையராஜாவை நாம் பெருமைப்படுத்த வேண்டும். பாரத ரத்னா விருது பட்டியலை பார்த்தால் பலருக்கு மறைவிற்கு பின்னரே வழங்கப்பட்டுள்ளது.

பல்வேறு துறை சாதனையாளர்களை அவர்கள் வாழும்போதே அங்கீகரிப்பதே நாம் அவர்களுக்கு தரும் மிகப்பெரிய மரியாதை, கவுரவம். எனவே, இளையராஜாவை பெருமைப்படுத்தும்விதமாக அவருக்கு பாரதரத்னா விருது வழங்க வலியுறுத்தி, 50 கிலோ சர்க்கரை, 250 முட்டையால் 5 அடி உயர உருவச்சிலையுடன் கேக் உருவாக்கினோம். 5 பேர், 5 நாளில் செய்து பார்வைக்கு வைத்த இச்சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்பி எடுத்துச் செல்கின்றனர்’’ என்றார். இவர்கள் ஏற்கனவே கடந்த காலங்களில்  பாரதியார் உருவ கேக், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பை  வெல்ல வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கோப்பை வடிவ கேக் தயாரித்து  ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: