அண்டார்டிகா பனிக் கடலுக்கு அடியில் முக்குளித்த முதல் பெண்!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

அண்டார்ட்டிகா என்றாலே எலும்பை உறையவைக்கும் பனிப் பரப்பு என்பதுதான் நம் நினைவுக்கு வரும். அப்படிப்பட்ட பனிக் கடலுக்கு அடியிலுள்ள அச்சமூட்டும் குகைக்குள் துணிச்சலாக முக்குளிக்கச் சென்ற முதல் நபர் மட்டுமல்ல முதல் பெண் ஆராய்ச்சியாளர் ஜில் ஹெய்னர்த்.

கடலுக்குள் மறைந்துபோன பழங்கால நாகரிகங்களைப் பற்றிய ரகசியங்களை வெளிக் கொண்டுவரும் பணியில் ஜில் ஹெய்னர்த் ஈடுபட்டுள்ளார். மெக்ஸிகோவின் மாயன் நாகரிகங்களின் மிச்சங்களைக் கண்டுபிடித்த குழுவையும் இவர்தான் வழிநடத்தினார்.

பனிக் கடலுக்கடியில் நீந்தி ஆராய்ச்சி மேற்கொள்ளும் அனுபவத்தைப் பற்றி கூறும்போது, ‘‘நான் நீந்தி ஆராய்ச்சி செய்த குகைகள் இயற்கை வரலாற்றின் அருங்காட்சியகம் போன்றவை. பழங்கால விலங்குகளின் எலும்புகள், புவிப் பரப்பில் கிடைக்காத பண்டைய நாகரிகத்தின் மிச்சங்கள் இங்குள்ளன. 2016 ஆம் ஆண்டு முக்குளிக்கச் சென்றபோது கடுமையான கடலடி நீரோட்டத்தில் சிக்கிக்கொண்டோம்.

நீரோட்டத்தின் வேகத்தால் பின்னுக்கு தள்ளப்பட்டோம். ஒரு சக்திவாய்ந்த சூறாவளிக்கு எதிராக நடக்க முயற்சிப்பதுபோல அந்த தருணம் இருந்தது. பனிப் பாறைகளுக்கு அடியில் இருந்த நீரில் கடுமையாக நீந்த வேண்டியிருந்தது. குகையிலிருந்து வெளியேற வலுவாக நீந்தினோம். அந்த அனுபவம் பயத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை கற்றுக்கொடுத்தது’’ என்கிறார் ஜில் ஹெய்னர்த்.

Related Stories: