ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில் விளம்பரம்; உயிர் பறிக்கும் ஆயுதமாக மாறும் கடன் செயலிகள்: எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் அறிவுரை


ஒவ்வொரு காலகட்டத்திலும் பொதுமக்கள் ஒவ்வொரு விதமான பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர். பிரச்னைகள் மக்களை தேடி வருகிறதா அல்லது பொதுமக்கள் பிரச்னைகளை தேடி செல்கிறார்களா என்று பார்த்தால் பெரும்பாலான விஷயங்களில் பொதுமக்கள் தேடி சென்று பிரச்னைகளில் சிக்குவது வாடிக்கையாகிவிட்டது. செல்போனுக்கு வரும் குறிப்பிட்ட லிங்க்குகளை தொட்டு தங்களது வங்கிக் கணக்கில் உள்ள பணம் முழுவதையும் இழக்கின்றனர். மேலும் விதவிதமான முறைகளில் பொதுமக்களை மர்ம கும்பல் ஏமாற்றி அவர்களின் பணத்தை பறித்து வருகிறது. வட மாநிலங்களில் இருந்து செயல்படும் இந்த கும்பலை பிடிப்பது என்பது மிகவும் சிக்கலான விஷயமாக உள்ளது. குறிப்பாக, நிதி நிறுவனங்களில் பணத்தை இழந்து ஏராளமானோர் தவித்து வருகின்றனர்.

முதலீடு செய்யும் பணத்திற்கு இரட்டிப்பு லாபம், அதிக வட்டி என பல்வேறு கவர்ச்சி விளம்பரங்களை நம்பி பலர் முதலீடு செய்து, பணத்தை இழந்து தவிக்கின்றனர். மற்றொருபுறம் தனியார் கடன் செயலிகளில் பணத்தை பெற்று, திரும்பி செலுத்த முடியாமல், அந்த நிறுவன ஊழியர்கள் கொடுக்கும் டார்ச்சரால், பலர் தங்களது உயிரையே மாய்த்து கொள்ளும் அளவிற்கு நிலைமை விபரீதமாக சென்று கொண்டிருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் பற்றி நன்கு விசாரிக்காமல், தங்களது தேவைக்கு அந்த நேரத்திற்கு பணம் கிடைத்தால் போதும் என்ற ரீதியில் பொதுமக்கள் எடுக்கும் சில தவறான முடிவுகளால் காலம் முழுவதும் அவர்கள் கஷ்டப்பட வேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக செல்போன் பயன்பாடு வந்த பிறகு பொதுமக்கள் அதிகளவில் இதில் சிக்கி தவிக்கின்றனர்.

இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், பொதுமக்கள் தொடர்ந்து இதுபோன்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். அந்த வகையில், சமீப காலமாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாவட்டங்களை குறிவைத்து வட மாநில கும்பல் கடன் செயலிகளை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் பொதுமக்கள் கடன் பெற்றுக் கொள்ளலாம் என வலிய வந்து கடன் தருகின்றன. பொதுமக்களும் ஆரம்பத்தில் அவசர தேவைக்கு என தங்களது செல்போன் மூலம் அவர்கள் கூறும் செயலியில் சென்று கடன் வாங்கி, குறிப்பிட்ட வட்டி சதவீதத்துடன் கடனை திருப்பி செலுத்துகின்றனர். ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்று பல்வேறு கம்பெனிகள் பொதுமக்களுக்கு கடன்களை வழங்கி அதனை மாதம்தோறும் குறிப்பிட்ட வட்டி வீதத்தில் வசூல் செய்து வந்தனர்.

இந்நிலையில் எந்தவித ஆவணங்களும் இன்றி செல்போனில் ஒரே ஒரு செயலியை டவுன்லோடு செய்தால் இலவசமாக உங்களுக்கு கடன் வழங்கப்படும் என பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு தற்போது இந்த கும்பல் பொதுமக்களிடம் கடன்களை வழங்கி, மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒவ்வொரு காவல் மாவட்டத்திலும் கடன் செயலிகளால் பாதிக்கப்பட்டவர்களின் வழக்குகள் அதிகரித்து வருகின்றன. எவ்வாறு மோசடி கும்பல் தங்களது யுத்திகளை கையாளுகின்றனர் என்று பார்த்தால் பல்வேறு பெயர்களில் இவர்கள் ஒரு நிமிடத்தில் கடன் வழங்கப்படும் 3 நிமிடத்தில் கடன் வழங்கப்படும் என அறிவிப்புகளை எஸ்எம்எஸ் மூலம் செல்போன் பயன்பாட்டாளர்கள் அனைவருக்கும் அனுப்புகின்றனர். மேலும் இதுகுறித்து சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்கின்றனர்.

இதனை நம்பி பண நெருக்கடியில் உள்ள சிலர் குறிப்பிட்ட அந்த செயலியை பதிவிறக்கம் செய்கின்றனர். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியில் முதலில் 4 அல்லது 5 கேள்விகள் கேட்கப்படும். அவை அனைத்திற்கும் ஓகே சொல்லி பட்டனை அழுத்தி விட்டால் நமது செல்போனில் உள்ள மொத்த எண்கள் மெசேஜ், வாட்ஸ்அப்பில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள் என அனைத்தையும் அவர்கள் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்வார்கள். இது நமக்கு தெரியாது. அதன் பிறகு கடன் கொடுப்பார்கள். முதலில் ரூ3000 கடன் தருவார்கள். அதனை 7 நாளில் கட்ட வேண்டும். ரூ3 ஆயிரம் கடன் வாங்கினால், நமது வங்கி கணக்கில் ரூ1800 முதல் ரூ2000 ரூபாய் மட்டுமே வரும். மீதியை அவர்கள் வட்டியாக பிடித்துக் கொள்வார்கள். ஆனால் பணம் கட்டும்போது மொத்தமாக 3 ஆயிரம் கட்ட வேண்டும்.

7 நாட்களுக்குள் இதை கட்டி முடித்து விட வேண்டும். தவறினால், இரு மடங்கு வட்டி வசூலிக்கப்படும். மேலும், கடன் எடுத்து முடித்த பிறகு நாம் வாங்கிய பணத்தை கட்டிய பிறகு நமக்கு தெரியாமலேயே நமது வங்கி கணக்கில் மீண்டும் பணம் வந்துவிடும். பல நேரங்களில் இதற்கான எஸ்எம்எஸ் நமக்கு வராது. ஆனால் ஒரு மாதம் கழித்து நமது வங்கி கணக்தை சரிபார்த்தால், பணம் இருக்கும். இதுகுறித்து வங்கியில் விசாரித்தால் நீங்கள் கடன் வாங்கி உள்ளீர்கள். குறிப்பிட்ட செயலியில் இருந்து உங்களுக்கு பணம் வந்துள்ளது என கூறுவார்கள். நாம், கடன் செயலியில் உள்ள நிதிநிறுவன எண்ணை தொடர்பு கொண்டு பேசினால், இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார்கள். நான் கடன் வாங்கவில்லை. நான் கேட்காமலேயே நீங்கள் ஏன் பணத்தை கொடுத்தீர்கள், என கேட்டால் அவர்கள் முறையாக பதிலளிக்க மாட்டார்கள்.

7 நாட்களுக்குள் அந்த பணத்தை செலுத்தவில்லை என்றால், முதலில் நமக்கு போன் செய்து, பணத்தை செலுத்த சொல்வார்கள். அவ்வாறு நாம் செலுத்தவில்லை என்றால் நமது செல்போனில் இருந்து ஏற்கனவே டவுன்லோட் செய்து வைத்திருந்த நமது படத்தை முதலில் ஆபாசமாக எடிட் செய்து அதனை நமது செல்போனில் உள்ள 10 பேருக்கு அனுப்புவார்கள். நாம் வேறு வழியில்லாமல் அந்த பணத்தை செலுத்தி விட்டு வெளியே வரலாம் என்று நினைத்தால் மீண்டும் மீண்டும் நமக்கு கடன் தந்து நம்மை மன உளைச்சலுக்கு ஆளாக்குவார்கள். 10 பேருக்கு நமது ஆபாச படத்தை அனுப்பியும், நாம் அவர்கள் சொல்லும்படி பணம் செலுத்தவில்லை என்றால் நமது செல்போனில் உள்ள பெண்களின் புகைப்படத்தை நம்முடன் மார்பிங் செய்து, அந்த ஆபாச படத்தை, நமது உறவினர்கள் பலருக்கும் அனுப்புவார்கள். இதனால் மிகப்பெரிய பிரச்னை ஏற்படும்.

அப்போது மீண்டும் நமது லைனில் வந்து உடனடியாக பணத்தை கட்டுங்கள் இல்லையென்றால் செல்போனில் உள்ள ஒவ்வொரு நம்பருக்கும் போட்டோ போய்க் கண்டே இருக்கும் என மிரட்டுவார்கள். இதனால் பலரும் அச்சப்பட்டு, பணத்தை கட்டி விடுகின்றனர். சிலர் செல்போன் எண்ணை மாற்றி விடுகின்றனர். சிலர் தங்களது செல்போனையே உடைத்து தூக்கி எறியும் சம்பவங்களும் நடந்து வருகிறது. அதன் பிறகு போலீசில் புகார் அளித்தால் போலீசார் நீங்கள் பணத்தை கட்டுங்கள் அல்லது கட்டாமல் போங்கள், செல்போன் எண்ணை மாற்றி விடுங்கள், என கூறுவார்கள். செல்போன் எண்ணை மாற்றினாலும் நமது வங்கி கணக்கில் உள்ள விவரங்களை அவர்கள் எடுத்து வைத்திருப்பார்கள். இதனால் வங்கி கணக்கையும் முடக்கும் சூழ்நிலை ஏற்படும். செல்போன் எண்ணை மாற்றி, வங்கி கணக்கையும் முடக்கினால் மட்டுமே இதிலிருந்து தப்பிக்க முடியும்.

இவ்வாறு வட மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கும்பல் தமிழகத்தில் பலரை ஏமாற்றி இந்த நூதன மோசடியில் பணம் பறிப்பில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பலரும் இதுகுறித்து புகார்களை அளித்து வருகின்றனர். மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வட மாநிலத்தில் உள்ளதால் போலீசார் அங்கு சென்று அவர்களை பிடிப்பதில் பல்வேறு சட்ட சிக்கல்கள் மற்றும் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்டு வரும் பொதுமக்களிடம் அறிவுரை கூறி இதுபோன்ற செயலிகளில் இனி பணம் வாங்காதீர்கள், என எச்சரித்து அனுப்பி வைக்கின்றனர். இந்த கடன் செயலியில் சிக்கும் அனைவரும் நன்கு படித்தவர்களே. அவசர தேவைக்காக பணம் இல்லை என்று கருதி தவறான செயலியில் உள்ளே சென்று மாட்டிக் கொண்டு, அதன் பிறகு வெளியே வர முடியாமல், கடைசியில் காவல்துறை உதவியோடு செல்போன் எண்ணை மாற்றி தப்பித்து வருகின்றனர்.

ஏற்கனவே இந்த கடன் செயலியால் சிலர் தற்கொலை செய்து கொண்ட நிலையில், சமீபத்தில் எழும்பூரில் ஒரு இளைஞர் உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு கடன் செயலியால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து, புதுப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் (33) என்பவர், டிராவல்ஸ் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு, நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன், என தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து எழும்பூர் போலீசார் விசாரித்த போது, கோபிநாத் குயிக் கேஷ் என்ற செயலி வாயிலாக ரூ50,000 கடன் பெற்றுள்ளார். இதை திருப்பி செலுத்தியதாக தெரிகிறது. ஆனாலும் கடன் அளித்த நபர்கள் கூடுதல் வட்டி கேட்டு அடிக்கடி மிரட்டி வந்துள்ளனர்.

அவர் செலுத்தாததால், கோபிநாத்தின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் பகிர்ந்து உள்ளனர். இதனால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் கோபிநாத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்த கோபிநாத்தின் தாய் தனலட்சுமி கூறும்போது, ‘‘மொபைல் செயலியில் வாங்கிய கடனை அடைக்க நகை அடகு வைத்து கொடுத்தோம். பணத்தை செலுத்திய பின் மீண்டும் மீண்டும் பணம் கேட்டு வடமாநில நபர்கள் மிரட்டினர். இந்த நிலையில் மகனின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது மொபைல் போனில் தொடர்பில் உள்ள அலுவலக ஊழியர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பி வைத்தனர். இதில் மனமுடைந்த கோபிநாத் அழுது கொண்டே இருந்தார். அவரை நாங்கள் சமாதானப்படுத்தி வைத்திருந்தோம். ஆனால். தற்போது தற்கொலை செய்து கொண்டார்,’’ என அழுதபடி கூறினார்.

இதுபோன்று பலர் தற்கொலை முடிவை தேடி செல்லும் சூழ்நிலையில் உள்ளனர். முன்பின் தெரியாத ஒருவர் நமக்கு பணம் தருகிறார் என்றால் அதுவும் ஒரு நிமிடத்தில் நமது வங்கி கணக்கில் பணம் வருகிறது என்றால் அவர் நம்மை எப்படி பயன்படுத்துவார் என்பதை பொதுமக்கள் நன்றாக புரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். எனவே இதுபோன்ற கடன் செயல்களில் சிக்கித் தவிக்காமல் கடன் செயலியால் உயிரிழந்த கோபிநாத்தின் மரணமே கடைசி உயிராக இருக்க வேண்டும் என்பதே போலீசாரின் கருத்தாக உள்ளது.

அலட்சியம் வேண்டாம்
கடன் செயலிகளை பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட செயலிகள் என்று எதுவும் கிடையாது. இந்த செயலிகளை நாம் டவுன்லோட் செய்ய பல்வேறு யுத்திகளை மோசடி கும்பல் செய்கிறது. குறிப்பாக நாம் மருத்துவமனை சார்ந்த தேடல்களை தேடும்போது நமக்கு அது கிடைக்காது அல்லது கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் உடனடியாக நாம் தேடும் மருத்துவமனை சார்ந்த குறிப்பு ஒரு செயலிக்குள் வைத்து அந்த மருத்துவமனை பற்றி தெரிந்துகொள்ள இதனை டவுன்லோட் செய்யவும் எனக் கூறும் வகையில் செட் செய்திருப்பார்கள். நாமும் குறிப்பிட்ட மருத்துவமனை சார்ந்த பதிவு தான் என நினைத்து டவுன்லோட் செய்வோம். டவுன்லோடு செய்தவுடன் நமது வங்கி கணக்கில் இருந்த பணம் அனைத்தும் போய்விடும். இதேபோன்று கடன் செயலிகளை பொருத்தவரை டவுன்லோட் செய்யும்போது நமது விவரங்கள் அனைத்தும் திருடு போய் விடுகின்றன. சிறிய தொகை என நினைத்து நாம் முதன் முதலில் இவர்களிடம் பணத்தைக் கடன் வாங்கி அடைத்து விட்டாலும், அதன் பிறகு இவர்களிடம் இருந்து வெளியே வர முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். எனவே சிறிய தொகை தான் என பொதுமக்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது

பின்னணியில் சீனா
பெரும்பாலும் வட மாநில கும்பல்கள் அதிக அளவில் தென் மாநிலத்தைச் சேர்ந்த நபர்களை ஏமாற்றி வந்தாலும், இதன் பின்னணியில் சீனா உள்ளதாக தற்போது தகவல்கள் வெளிவர தொடங்கி உள்ளன. அந்த வகையில் கடன் செயலிகளை சீனர்கள் உருவாக்கி கூகுள் பிளே ஸ்டோரில் பரப்புகின்றனர். இதுதொடர்பாக, 2 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் பதுங்கி இருந்த சீன நாட்டைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் கூட்டாளி சிங்கப்பூரில் இருந்து தப்பிவிட்டான். கடன் செயலி வாயிலாக சுருட்டப்படும் பணம் சீனாவுக்கு செல்வதாகவும், இதன் பின்னணியில் மிகப்பெரிய நெட்வொர்க் உள்ளதாகவும் அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது. எனவே பொதுமக்கள் இந்த விஷயத்தில் கவனமுடன் இருப்பது நல்லது.

என்ன செய்ய வேண்டும்
பெரும்பாலும் இந்த கடன் செயலிகளில் கடன் வழங்கும்போது கூடவே கேரண்டி என்ற பெயரில் கூடுதலாக மூன்று செல்போன் எண்களை கேட்டு வாங்குவார்கள். நாம் நமது மனைவி அல்லது குடும்பத்தில் உள்ள நபர்கள் அல்லது நண்பர்களின் செல்போன் எண்களைத் தருவோம். அவர்கள் அந்த எண்களை பத்திரமாக வைத்துக்கொண்டு பிரச்னை ஏற்படும் போது கடன் வாங்கியவர்கள் செல்போனை எடுக்கவில்லை அல்லது சுவிட்ச் ஆப் செய்து விட்டால் கூடுதலாக பெறப்பட்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்டு அவர்களை மிரட்டுகின்றனர். எனவே இவர்களிடம் தப்பிக்க முடிந்தவரை நாம் கொடுத்த 3 எண்களையும் மாற்றிவிட வேண்டும். மேலும் நமது வங்கிக் கணக்கிணையும் முடக்கி வைக்க வேண்டும் அப்போதுதான் மோசடி கும்பல் நமது அக்கவுண்டில் பணம் போடுவதை தவிர்க்க முடியும். மேலும் அவர்கள் நம்மை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாதவாறு தடுத்து நிறுத்த வேண்டும். சில மாதங்கள் அவர்கள் நம்மை தொடர்பு கொள்ள முயற்சி செய்வார்கள். அதன் பிறகு நம்மை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றால் நம்மை விட்டு விடுவார்கள்.

போலீசாரின் அறிவுரை
கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்யும் போது, நமது போனில் உள்ள தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தையும் அந்த கடன் நிறுவனம் பெற்றுக்கொள்கிறது. குறிப்பிட்ட காலத்தில் நாம் கடன் தொகையை செலுத்த தவறினால், அதை வைத்து கடன் வழங்கும் நபர்கள், கடன் பெறுபவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து, மிரட்டும் நிலை ஏற்படும். இதனால், பலர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்கின்றனர். எனவே முடிந்தவரை நமக்கு அறிமுகம் இல்லாத அல்லது ஆபத்தை விளைவிக்க கூடிய கடன் செயலிகளை பொதுமக்கள் டவுன்லோட் செய்ய வேண்டாம். மேலும் இந்த விவகாரத்தில் யாரேனும் மிரட்டினார்கள் என்றால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும் அதை விட்டுவிட்டு எந்த ஒரு தவறான முடிவிற்கும் செல்லக்கூடாது காவல் நிலையத்தில் உங்களுக்கு தேவையான அறிவுரைகள் வழங்கப்படும். மேலும் உங்களது புகைப்படங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் புகைப்படங்களை தவறான முறையில் சித்தரித்து அனுப்புகிறார்கள் என்றால் முதலில் நிதானமுடன் அவர்களை கையாள கற்றுக் கொள்ளுங்கள். காவல்துறை உதவியுடன் கண்டிப்பாக இதுபோன்ற மோசடியில் இருந்து வெளியே வரலாம் என தெரிவித்தனர்.

போலி எண்கள்
பெரும்பாலும் பொதுமக்களை தொடர்பு கொள்ளும் கடன் செயலியை சேர்ந்த நபர்கள் பாகிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில் இருந்து பேசுவது போன்று அவரது நெட்வொர்க்கை செட் செய்து உள்ளனர். பெரும்பாலும் இவர்களது எந்த ஒரு செல்போனும் ஒரிஜினல் செல்போன் நம்பராக இருக்காது. மேலும் இவர்களை நாம் நினைக்கும் போது தொடர்பு கொள்வது கடினம்.

The post ஆசையை தூண்டும் வகையில் வலைதளங்களில் விளம்பரம்; உயிர் பறிக்கும் ஆயுதமாக மாறும் கடன் செயலிகள்: எச்சரிக்கையுடன் இருக்க போலீசார் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: