சென்னையின் குடிநீர் தேவைக்காக ரூ.100 கோடியில் திருநின்றவூர் ஏரி புனரமைப்பு


சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக மாதத்துக்கு ஒரு டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். எனவே இப்போது ஏரிகளில் இருக்கும் தண்ணீரை கொண்டு 9 மாதங்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முடியும். சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல், தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11.757 (11.7 டிஎம்சி) மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கலாம்.

கடந்தாண்டு பருவமழை எதிர்ப்பார்த்த அளவு பெய்ததால் குடிநீர் ஏரிகள் அனைத்தும் நிரம்பின. போதுமான அளவு தண்ணீர் இருப்பு இருந்தது. தற்போது கோடை காலம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியதால் ஏரிகளிலிருந்து நீரின் அளவு குறைய தொடங்கியது. கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் பெரிய அளவில் ஏரிகளில் நீர் நிரம்பவில்லை. தொடர்ந்து ஏரிகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதால் அனைத்து ஏரிகளிலும் நீர்மட்டம் மெதுவாக குறைந்து வருகிறது.

மேலும் சென்னைக்கு குடிநீர் தேவை ஒரு டிஎம்சியிலிருந்து 2 டிஎம்சியாக உயரக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கூடுதலாக குடிநீர் ஆதாரங்களை உருவாக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. அதன்படி போரூர், ரெட்டேரி மற்றும் அயனம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகள் சீர்செய்யப்பட்டு வருவதை போல திருநின்றவூரில் உள்ள ஏரியை புனரமைத்து சென்னை மற்றும் ஆவடிக்கு குடிநீர் ஆதாரமாக மாற்றும் முயற்சியில் நீர்வளத்துறை முயற்சித்து வருகிறது.

சென்னைக்கு மேற்கு பகுதியில் மிகப்பெரிய ஏரியான திருநின்றவூர் ஏரி சுமார் 349 ஹெக்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது, ஈசா ஏரி என்றும் அழைக்கப்படுகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 12 அடியாக இருந்தது. பல ஆண்டுகளாக ஏரியில் நிரம்பும் தண்ணீரை கொண்டு சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் நடந்து வருகிறது. சுமார் 700 ஏக்கர் விளைநிலங்களுக்கு ஆதாரமாகவும் உள்ளது.
பொதுப்பணித்துறையால் பராமரிக்கப்பட்டு வரும் இந்த ஏரியை சுற்றி ராமதாசபுரம், கன்னிகாபுரம், சுதேசி நகர், திருவேங்கட நகர், முத்தமிழ் நகர், பெரியார் நகர் மற்றும் திருநின்றவூர் கிராமம், கொட்டாமேடு, கொசவன்பாளையம், ராஜாங்குப்பம், சரத்த கண்டிகை ஆகிய பகுதிகள் உள்ளன.

இந்நிலையில் கடந்த 1990ம் ஆண்டு ஏரியின் ஒரு பகுதி சுமார் 50 ஏக்கர் இடத்தை தமிழ்நடு குடிசை மாற்று வாரியம் எடுத்து பொதுமக்கள் குடியிருப்புக்காக வழங்கியது. அதன்படி சுதேசி நகர், முத்தமிழ் நகர் உள்ளிட்ட பகுதியில் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மழைக்காலங்களில் வீணாகும் நீரை சேமித்து வைக்கவும், சென்னையின் குடிநீராதாரமாக மாற்றுவதற்கு என ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து திருநின்றவூர் ஏரியை புனரமைப்பதற்கான முன்னேற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போதைய நீர்த்தேக்கமான 150 மில்லியன் கன அடியிலிருந்து 500 மில்லியன் கனஅடியாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, நீர்வளத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: எதிர்காலங்களில் சென்னைக்கு கூடுதலாக குடிநீர் ஆதாரங்களை உருவாக்கும் முயற்சியில் நீர்வளத்துறை ஈடுபட்டு வருகிறது.

அந்த வகையில் போரூர், ரெட்டேரி மற்றும் அயனம்பாக்கம் உள்ளிட்ட நீர்நிலைகள் புனரமைக்கப்படுகிறது. அந்த வகையில், ஆவடி அடுத்த திருநின்றவூர் ஏரி தூர்வாரப்பட்டு புனரமைக்கப்பட உள்ளது. இதன்மூலம் தற்போது 150 மில்லியன் கன அடியாக உள்ள திருநின்றவூர் ஏரி 500 மில்லியன் கனஅடியாக அதிகரிக்கப்படும். பல ஆண்டுகளாக தூர்வாரப்படாததால் ஏரியை சீரமைப்பது பெரும் சவாலாக உள்ளது. ஆக்கிரமிப்புகள் மற்றும் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளிலிருந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது.

இதனால் இந்த ஏரி 1.50 மீட்டர் ஆழம் வரை வண்டல் மண் மற்றும் சவுடு படிந்து கூம்பு வடிவில் உள்ளது. ஏரியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி கழிவுநீர் வெளியேறும் இடங்கள் அடைக்கப்படும். மேலும் ஏரியின் கரைகள் வலுப்படுத்தப்படும். தண்ணீரை சேமித்து வைப்பதற்காக மதகுகள் மற்றும் கால்வாய்கள் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் பெருகும். அதேபோல் சென்னைக்கு 15 நாட்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

* புனரமைப்பு பணிகள் முடிந்தால் சுற்றுப்பகுதிகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்பு குறையும்.

* திருநின்றவூர் ஏரியை புனரமைத்தால் சென்னை மட்டுமின்றி ஆவடி மாநகராட்சியும் பயன்பெறும்.

* திருநின்றவூர் ஏரியை புனரமைப்பதற்கான முன்னேற்பாடுகளை சென்னை மண்டல நீர்வளத்துறை தொடங்கியுள்ளது.

* ஏரியில் உள்ள 30 லட்சம் கன மீட்டர் சவுடு மணலை அகற்றி விற்பனை செய்வதன் மூலம் ரூ.36 கோடி வருவாய் கிடைக்கப்படும்.

* பூண்டி, செம்பரம்பாக்கம் நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் திருநின்றவூர் ஏரியில் சேமிக்கப்படும்.

* நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

The post சென்னையின் குடிநீர் தேவைக்காக ரூ.100 கோடியில் திருநின்றவூர் ஏரி புனரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: