வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 82 லட்சம் தங்கம் பறிமுதல்: இலங்கை பெண் உள்பட 6 பேர் கைது

மீனம்பாக்கம்: வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் சென்னை கடத்தி வரப்பட்ட 82 லட்சம் மதிப்புடைய 2.1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, இலங்கை பெண் உள்பட 6 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 3.15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சென்னையை சேர்ந்த முஸ்தாக் அகமது (22) என்பவர் சுற்றுலா பயணியாக துபாய் சென்று, ெசன்னை திரும்பினார். அவர் மீது சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால், அவரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது, அவரது உள்ளாடைக்குள் 295 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருப்பது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.

அதை தொடர்ந்து, அதிகாலை 4 மணிக்கு இலங்கையில் இருந்து சென்னை வந்த இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், அடுத்து காலை 7.30 மணிக்கு மலேசியாவில் இருந்து சென்னை வந்த ஏர் ஏசியா விமானம், காலை 8.30 மணிக்கு சென்னை வந்த லங்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஆகியவற்றில் சென்னை வந்த பயணிகளில் சந்தேகப்பட்டவர்களை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இலங்கையை சேர்ந்த அஞ்சனா (37) என்ற பெண் பயணி, திருச்சியை சேர்ந்த ரகமதுல்லா (23), ரியால் முகமது (31), ராமநாதபுரத்தை சேர்ந்த சாகுல் அமீது (28), ரகுமான் கான் (25) ஆகிய 5 பேர் தங்கம் கடத்தி வந்தது தெரிந்தது. அவர்களிடம் இருந்து தங்க கட்டிகள் மற்றும் தங்க  நகைகளை சுங்க அதிகாரிகள் கைபற்றினர்.  இலங்கை பெண் பயணி உள்பட 6 பேரிடம் இருந்து ₹82 லட்சம் மதிப்புடைய 2.1 கிலோ தங்கம் மற்றும் நகைகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து, பிடிபட்ட 6 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: