கங்கை புத்துயிர் திட்டம் கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணமாக இருக்க வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு

கான்பூர்: ‘‘கங்கை புத்துயிர் திட்டம், கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜொலிக்கும் உதாரணமாக இருக்க வேண்டும்’’ என தேசிய கங்கை கவுன்சிலின் முதல் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். கங்கை நதியை சுத்தப்படுத்துவதற்காக தேசிய கங்கை கவுன்சில் அமைக்கப்பட்டு, ‘நமாமி கங்கை’ திட்டம் உருவாக்கப்பட்டது. கங்கை நதியில் உ.பி கான்பூர் பகுதியில்தான் அதிக மாசு காணப்படுகிறது. இதனால், நமாமி கங்கை திட்டம் தொடங்கப்பட்டபின், கான்பூர் பகுதியில் 16 வடிகால்கள் அமைக்கப்பட்டன. இதில், 13 வடிகால்களில் சேகரிக்கப்படும் தண்ணீர் முழுவதும் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டு கழிவு பொருட்கள் அகற்றப்படுகின்றன. கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை மேற்கொள்ளப்படும் இத்திட்டத்துக்காக, 5 மாநிலங்களிக்க ₹20 ஆயிரம் கோடி அளிக்க மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இத்திட்டத்துக்காக சுத்திகரிப்பு நிலையங்கள் அனுப்ப இதுவரை ₹7,700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தேசிய கங்கை கவுன்சிலின் முதல் கூட்டம் கான்பூரில் உள்ள சந்திரசேகர் ஆசாத் வேளாண் பல்கலைக் கழகத்தில் நேற்று நடந்தது. இதற்கு தலைமை தாங்குவதற்காக பிரதமர் மோடி நேற்று கான்பூர் சென்றார். அவரை உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ஆகியோர் வரவேற்றனர்.

நமாமி கங்கை திட்டம் குறித்து ஆய்வு செய்த பிரதமர் மோடி, இத்திட்டம் குறித்த கண்காட்சியையும் பார்வையிட்டார். இதில் கங்கை சுத்தப்படுத்தும் பணிகள் குறித்து விளக்கப்பட்டிருந்தன. இந்த  கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி,  ‘‘கங்கை மிகவும் புனிதமான நதி. கங்கை  புத்துயிர் திட்டம் கூட்டாட்சி  ஒத்துழைப்புக்கு ஜொலிக்கும் உதாரணமாக இருக்க  வேண்டும். கங்கை புத்துயிர்  திட்டம் நாட்டில் நீண்ட காலமாக நிலுவையில்  இருக்கும் சவால். எனது அரசு  நமாமி கங்கை திட்டத்தை கடந்த 2014ல் எடுத்து பல மாநில அரசின்  ஒருங்கிணைந்த முயற்சியுடன் கங்கையில் உள்ள  மாசுவை அகற்றும் பணியில்  ஈடுபட்டுள்ளது. கங்கை நதி புத்துயிர்  திட்டத்துக்கு பொதுமக்களின்  ஒத்துழைப்பும் தேவை. கங்கை நதிக்கரையில் உள்ள  நகரங்களில், கழிவுகளை  வெளியேற்றுவதில் சிறந்த முறைகளை பின்பற்றும்படி  விழிப்புணர்வை பரப்ப  வேண்டும்,’’ என்றார். இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளை பார்வையிட, கங்கையின் அடல் படித்துறை பகுதிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கிருந்து அரை மணி நேரம் படகு பயணம் மேற்கொண்டார்.

தவறி விழுந்த மோடி

கங்கை நதியில் படகு பயணத்தை முடித்துவிட்டு, அடல் படித்துறையின் படிக்கட்டில் பிரதமர் மோடி ஏறிக் கொண்டிருக்கும்போது, திடீரென கால்தடுமாறி படிக்கட்டில் விழுந்தார். ஆனால், அவர் கையை ஊன்றியதால் முகத்தில் அடிபடாமல் தப்பினார். கீழே விழுந்த பிரதமர் மோடியை, பாதுகாவலர்கள் பாய்ந்து சென்று தூக்கினர்.

Related Stories: