அடுத்த தலைமுறைக்காக ஆற்றல் வளங்களை காப்போம்....இன்று சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினம்

அதென்ன ஆற்றல் வளம்... பலமாக இருப்பதா என்கிறீர்களா? ஒரு வகையில் இது சரிதான்... நாடு பலமாக இருப்பதற்கு என்று திருத்திக் கொள்ளுங்கள். இயற்கையாகவே கிடைக்கும் ஆற்றல் வளங்களை நம் வாழ்நாள் காலத்திலும், வருங்கால தலைமுறையினருக்காகவும் சேமித்து வைக்க வேண்டும். இதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ம் தேதி சர்வதேச ஆற்றல் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது.ஆற்றல் வளங்கள் என்னென்ன என்று பார்க்கலாமா?

பொதுவாக, ஆற்றல் வளங்கள் புதுப்பிக்க கூடியவை, புதுப்பிக்க இயலாதவை என இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. சூரிய ஒளி, காற்று, நீர்ப்பெருக்கு, புவிவெப்ப ஆற்றல், உயிர்த்திரள் ஆகியவை புதுப்பிக்கூடிய ஆற்றல் வளங்கள் எனப்படுகின்றன. இயற்கை எரிவாயு, நிலக்கரி, தனிமங்கள் ஆகியவை புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் எனப்படுகின்றன. புதுப்பிக்க கூடிய ஆற்றல் வளங்களை விரைவில், சுற்றுசூழல் மூலம் மீண்டும் உண்டாக்கலாம். இவ்வளங்கள் இயற்கை மூலங்களான சூரியன், காற்று, மழை, கடல் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகிறது. இவ்வளங்களிலிருந்து தேவைப்படும் நேரங்களில் ஆற்றலை மீண்டும் மீண்டும் பெற முடியும். அதைத்தான் நீர் மூலம் மின்சாரம் சேமிப்பு, சூரியன் மூலம் எரிசக்தி சேமிப்பு உள்ளிட்டவைகள் இதில் அடங்கும். கடல் நீரிலும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்த வளங்கள் இயற்கையிலே மிக அதிகளவு கிடைக்கின்றன. மேலும் இவ்வளங்களிலிருந்து ஆற்றலைப் பெற்று பயன்படுத்தும்போது, அவை சுற்றுசூழலுக்கு பெரும்பாலும் பாதிப்பை உண்டாக்குவதில்லை.

புதுப்பிக்க இயலாத ஆற்றல் வளங்கள் என்பவை குறுகிய காலத்தில் மீண்டும் சுற்றுச்சூழலால் உண்டாக்க இயலாத வளங்கள் ஆகும். இவ்வளங்கள் பூமியின் அடியிலிருந்து பெறப்படுபவை ஆகும். இவ்வளங்கள் 50, 60 ஆண்டுகளில் மறைந்து விடும். இது ஒரு கால அளவு அவ்வளவுதான்... மற்றபடி ஆண்டுகள் கூடலாம். குறையலாம். புதுப்பிக்க இயலாத வளங்கள் ஒரு குறிப்பிட்ட அளவு வரையறைக்கு உட்பட்டவையாகும்.புதைபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்கள், இயற்கை எரிவாயு, கதிர்வீச்சு தனிமங்கள், நிலத்தடி நீர் போன்றவை புதுப்பிக்க இயலாத வளங்களாகும். ஆற்றல் மூலங்களிலிருந்து ஆற்றலினைப் பெற்று பயன்படுத்தும்போது சுற்றுச்சூழலில் கடுமையான விளைவுகள் உண்டாகின்றன. எனவே சுற்றுசூழலின் கடுமையான விளைவுகளின் தாக்கத்தினைக் குறைக்க ஆற்றலினை அளவோடு பயன்படுத்த வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் திட்டம், நியூட்ரினோ திட்டம் இந்த வகையை சேர்ந்ததுதான் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மேலும் குறைந்து வரும் புதுப்பிக்க இயலாத வளங்களை வருங்கால சந்ததியினரின் நலத்தை கருத்தில் கொண்டு பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நம் நாடு உட்பட உலக நாடுகள் பல உள்ளன.

புதுப்பிக்கக்கூடிய வளங்களை முழுமையாக பயன்படுத்த சிறந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அவசியமாகிறது. இதை நம்மில் இருந்தே துவக்க வேண்டும். நம் வீட்டில் கூட தேவையில்லாத இடங்களில் எரியும் பேன்கள், மின்விளக்குகளை அணைக்க வேண்டும். வெளிச்சம் குறைவாக தேவைப்படும் இடங்களில் அதற்கேற்ற மின்விளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதனால் மின்கட்டணம் குறைவதோடு மறைமுகமாக சுற்றுசூழல் சீர்கேடும் தடுக்கப்படுகிறது என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். போக்குவரத்திற்கு தனிநபர் வாகன பயன்பாட்டினைக் குறைத்து பொது வாகன பயன்பாட்டினை மேற்கொள்ளலாம். இது எல்லோரும் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு. கூடுமானவரை வாகன பயன்பாட்டை குறைத்துக் கொள்வது நல்லது.நம் அன்றாட வாழ்வில் நிலக்கரி, பெட்ரோல், அணு, மின்சாரம் ஆகியவை முக்கிய எரிபொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதில் எண்ணெய் வளம் அடுத்த 45 ஆண்டுகளுக்கும், எரிவாயு அடுத்த 65 ஆண்டுகளுக்கும், நிலக்கரி அடுத்த 200 ஆண்டுகளுக்கு மட்டுமே கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.இப்ேபாதாவது புரிகிறதா? இயற்கையாக கிடைக்கும் ஆற்றல் வளங்களை அளவாக பயன்படுத்த வேண்டுமென்று?

Related Stories: