ஹெல்மெட்டால் தாக்கி கம்பெனி ஊழியரிடம் 18 லட்சம் பறிப்பு: 7 பேர் கும்பலுக்கு வலை

தண்டையார்பேட்டை: வியாசர்பாடி எம்கேபி நகர் ராஜிவ்காந்தி நகரை சேர்ந்தவர் முகமது அபுபக்கர் சித்திக் (36). இவரும், இவரது நண்பர் அப்துல்கபாரும் நேற்று முன்தினம் இரவு 2வது கடற்கரை சாலையில் உள்ள ஆன்லைன் மூலம் பணம் அனுப்பும் நிறுவனத்தில் இருந்து 17.91 லட்சத்தை பெற்று, மொபட் சீட்டுக்கு அடியில் வைத்துக்கொண்டு திருவல்லிக்கேணியில் வசிக்கும் கம்பெனி உரிமையாளர் முகமதுஹனீஸ் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது, அவர்களை பின்தொடர்ந்து 3 பைக்கில் வந்த 7 பேர், பாரிமுனை மூர்தெருவில் ஹெல்மெட்டால் அபுபக்கர் சித்திக்கின் தலையில் ஓங்கி அடித்தனர். இதில், நிலைதடுமாறி மொபட்டுடன் இருவரும் கீழே விழுந்தனர். அந்த நேரத்தில் மொபட்டில் சீட்டுக்கு கீழ் வைத்திருந்த 17.91 லட்சத்தை எடுத்து கொண்டு அந்த கும்பல் தப்பியது. இவர்கள் கூச்சலிட்டதால் பொதுமக்கள் கொள்ளையர்களை விரட்டி சென்றனர். இதனால் பணப்பையை மறைவான இடத்தில் வீசிவிட்டு சென்றனர்.

இதுகுறித்து வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு காவல் நிலையத்தல்,  சித்திக் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வருகின்றனர்.  இந்நிலையில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் பழச்சாறு கடை நடத்தி வரும், மண்ணடி அங்கப்பன் தெருவை சேர்ந்த தர்மதுரை (27) என்பவர், அந்த பணப்பையை பார்த்துள்ளார். அதில் 17.91 லட்சம் அப்படியே இருந்துள்ளது.  இதையடுத்து இவரும், இவரது மாமா கமலக்கண்ணனும் வடக்கு கடற்கரை குற்றப்பிரிவு போலீசில் ₹8 லட்சத்தை ஒப்படைத்தனர்.

மீதி பணம் குறித்து விசாரித்தபோது, தர்மதுரை முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தீவிர விசாரணையில், அந்த பையில் 17.91 லட்சம் இருந்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து தர்மதுரையை வீட்டுக்கு அழைத்து சென்று பார்த்தபோது, அங்கு 7.90 லட்சம் இருந்தது. மீதமுள்ள 2 லட்சத்தை வக்கீல்கள் எடுத்துகொண்டதாக தர்மதுரை கூறியுள்ளார். இதையடுத்து தர்மதுரையிடமும், அவரது மாமாவிடமும் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் தனியார் நிறுவன ஊழியர்களிடம் வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல் மற்றும் வக்கீல்களை போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா? என்பது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: