காரைக்குடி கழனிவாசலில் 8 மாதமா குடிநீர் ‘கட்’

*நா வறட்சியில் தவிக்கும் மக்கள்

காரைக்குடி :  காரைக்குடி கழனிவாசலில் 8 மாதங்களாக குடிநீர் விநியோகம் இல்லாததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். காரைக்குடி கழனிவாசல் வெள்ளையன் தெருவில் இருந்து காளையப்பா நகர் சந்திப்பு வரை உள்ள புதிய மறுவரையறை செய்யப்பட்ட 2வது வார்டில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாதாள சாக்கடை பணிக்காக சாலை முழுவதும் பள்ளம் தோண்டி பணிகள் மேற்கொண்டனர். பின்னர் அச்சாலைகளில் தார் சாலை அமைத்தனர். அதன்பின்பிருந்து வெள்ளையன் தெரு வீடுகளுக்கு குடிநீர் வருவது நின்று விட்டது. இதற்கு என்ன காரணம் என இப்பகுதி மக்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாண்டி கூறுகையில், ‘கழனிவாசல் வெள்ளையன்தெருவில் கடந்த 8 மாதத்திற்கும் மேலாக வீட்டு குடிநீர் குழாயில் காற்று மட்டும்தான் வருகிறது. குடிநீர் வராதது குறித்து பலமுறை நகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு சில நாட்களில் அனைவரும் புகார் செய்தோம். அன்று மட்டும் லாரியில் குடிநீர் சப்ளை செய்வார்கள். குடிநீரே விநியோகிக்காமல் கட்டணம் செலுத்த கோரி வீடுகள்தோறும் நோட்டீஸ் மட்டும் அனுப்பியுள்ளனர்.

எனவே காரைக்குடி நகராட்சி நிர்வாகம் உடனே குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்’ என்றனர். நேற்று காலை இப்பகுதியில் பாதாள சாக்கடையை ஒட்டி சாலையோரம் 2 இடங்களில் பெரிய பள்ளம் ஏற்பட்டு அதிலிருந்து குடிநீர் வீணாக சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: