தெலங்கானா என்கவுன்டர் விவகாரம்: ஓய்வு பெற்ற நீதிபதி சிர்புர்கர் தலைமையில் விசாரணை கமிஷன்: 6 மாதத்தில் அறிக்கை தர உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தெலங்கானா என்கவுன்டர் விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி வி.எஸ்.சிர்புர்கர் தலைமையில் 3 பேர் கொண்ட விசாரணை கமிஷனை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. ஐதராபாத்தில் பெண் டாக்டர் டிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), கடந்த மாதம் 28ம் தேதி 4 பேரால் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களையும், கடந்த 6ம் தேதி சம்பவ இடத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றபோது, போலீசாரின் துப்பாக்கியை பிடுங்கி சுட முயன்றதால், அவர்களை என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். இந்த நிலையில் மேற்கண்ட என்கவுன்டர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் ஜி.எஸ்.மணி, பிரதீப்குமார் ஆகியோர் கடந்த வாரம் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த விவகாரத்தில் மனித உரிமை முற்றிலும் மீறப்பட்டுள்ளது என்று அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அமர்வு, உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் அறிவித்திருந்தனர். இந்நிலையில், வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “தெலங்கானா என்கவுன்டர் விவகாரத்தில், மக்களுக்கு உண்மை நிலை கண்டிப்பாக தெரியவேண்டும். இதனால் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.எஸ்.சிர்பூர்கர் தலைமையில் சி.பி.ஐ. முன்னாள் இயக்குனர் கார்த்திகேயன், மும்பை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரேகா பிரகாஷ் பல்டோடா ஆகியோர் அடங்கிய விசாரணைக் கமிஷன் அமைக்கப்படுகிறது.

இவர்களுக்கு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இதைத்தவிர விசாரணை ஆணையத்திற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தெலங்கானா மாநில அரசு செய்து கொடு க்க வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்கும் வரை தெலங்கானா உயர்நீதிமன்றமோ அல்லது வேறு ஆணையமோ வழக்கை விசாரிக்க கூடாது. 6 மாத காலத்தில் இக்குழுவினர் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

Related Stories: