CAB 2019-க்கு எதிராக அசாமில் போராட்டம்: பிரதமர் மோடி-ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே சந்திப்பு டெல்லிக்கு மாற்றவுள்ளதாக தகவல்

டெல்லி: அசாமில் நடைபெற்று வரும் போராட்டங்கள் காரணமாக, பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் குவஹாத்தியில் சந்தித்துப் பேசுவது சந்தேகேமே என தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா, ஜப்பான் இடையே பாதுகாப்பு  ஒப்பந்தம் (ஏசிஎஸ்ஏ) ஏற்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே இம்மாதம் இந்தியா வர திட்டமிடப்பட்டிருந்தது. இந்தியா வருகை தரும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, வரும் 15, 16 ஆகிய தேதிகளில் பிரதமர் மோடியை   சந்தித்துப் பேசுகிறார். இந்த சந்திப்பை அசாம் தலைநகர் குவஹாத்தியில் நடத்த திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

ஜப்பான் பிரதமர் அபே, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தங்க உள்ளார். இதன்மூலம் இம்பாலில் தங்கும் முதல் ஜப்பான் பிரதமர் எனும் சிறப்பை பெறவுள்ளார். ஏனெனில் இம்பால், 2-ஆம் உலகப் போரின் போது, ஜப்பானுக்கும் எதிரி நாட்டு  கூட்டுப் படைகளுக்குமான போர்க்களமாக இருந்துள்ளது. இம்பாலில் நடைபெற்ற போரின் 75-ஆவது ஆண்டு தினத்தை குறிக்கும் விதமாக கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்ட அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டு, அங்கு அமைதிக்காக  நினைவஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாமில் போராட்டங்கள் வெடித்துள்ளன. மசோதா நிறைவேறியிருப்பது குறித்து கவலைப்பட ஒன்றுமில்லை,  என்பதை அசாமில் உள்ள எனது சகோதரர்கள், சகோதரிகளுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன் என பிரதமர் மோடி உறுதிபட கூறியுள்ளார். அசாம் மக்களின் உரிமைகள், தனித்துவமான அடையாளம் மற்றும் அழகான கலாச்சாரத்தை யாரும்  பறிக்க முடியாது. அது தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கும் என்பதையும் உறுதியளிக்க விரும்புகிறேன். அசாம் மக்களின் அரசியல், மொழிவாரி, பண்பாட்டு, நில உரிமைகளை காக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. அரசியல்  சட்டத்தின்படி அசாம் மக்களின் உரிமைகளை மத்திய அரசும் தானும் பாதுகாப்போம், என்று கூறியுள்ளார்.

இதனால், பிரதமர் மோடியும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் குவஹாத்தியில் சந்தித்துப் பேசுவது சந்தேகேமே என தகவல் வெளியாகியுள்ளது. குவஹாத்திக்கு பதில் டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் மோடி-ஷின்சோ அபே சந்திப்பு  நிகழலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: