13 ஆயிரம் முதலீட்டாளர்களிடம் 2,000 கோடி பிட்காயின் மோசடி: திருச்சியை சேர்ந்த 5 பேர் கைது

திருச்சி: 2,000 கோடி பிட்காயின் ேமாசடி தொடர்பாக  திருச்சி, புதுகையை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் ராஜதுரை. இவரது மனைவி ஸ்வேதா. கடந்த மார்ச் மாதம் கோபியை சேர்ந்த கங்காதரன் என்பவரை தம்பதியினர் சந்தித்து ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வதாக கூறி உள்ளனர். அதில் 2.80 லட்சம் முதலீடு செய்தால் மாதம்தோறும் 20 ஆயிரம் வரை கமிஷன் கொடுப்பதாக கூறி உள்ளனர். அதை நம்பிய கங்காதரன், அவர்களிடம் 2.80 லட்சம் கொடுத்துள்ளார். முதல் நான்கு மாதங்கள் கமிஷன் தொகை கொடுத்தவர்கள் அதன்பின்னர் தரவில்லை. இதுபற்றி கங்காதரன் விசாரித்தபோது, பெயரளவிற்கு ஆன்லைன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்வது போன்ற தோற்றத்தை உருவாக்கி, முதலீட்டாளர்களிடம் பெற்ற பணத்தை இந்திய அரசால் தடை செய்யப்பட்ட பிட்காயின் எனப்படும் பணமில்லா பரிவர்த்தனையில் முதலீடு செய்து அரசை ஏமாற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கங்காதரன் மற்றும் முதலீட்டாளர்கள் 20 பேர், கோபி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ராஜதுரை கும்பல் இந்தியா முழுவதும் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த ஏஜென்ட்களில் ஒருவரான கார்த்தி என்பவர் திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் அலுவலகம் வைத்திருந்தார். இவர், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சங்கம்பட்டியை சேர்ந்த முருகேசன்(30) என்பவரிடம் 36.40 லட்சம் முதலீடு பெற்றார். இதற்கு கமிஷன் தொகையாக 5 லட்சத்து 25 ஆயிரம் தந்துள்ளனர். அதன்பிறகு பணம் எதுவும் தரவில்லை.

இதுகுறித்து முருகேசன் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார்  வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கார்த்தி (38) மற்றும் இவருக்கு உடந்தையாக இருந்த திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வால்மால்பாளையத்தை சேர்ந்த குட்டிமணி(31), கணேசன்(47), தங்கராஜ்(36), நாமக்கல்லை சேர்ந்த ரமேஷ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்களில் மண்ணச்சநல்லூர் குட்டிமணி, மோசடி தம்பதி ராஜதுரை- ஸ்வேதாவின் முக்கிய கூட்டாளி. கைதான ரமேஷ் இந்நிறுவனத்தின் அட்மினாக இயங்கி வந்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரித்ததில், ராஜதுரை, சுவேதா இருவரும் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டதாகவும், இதுவரை 13,000 பேரிடம் ₹2,000 கோடி வரை மோசடி செய்ததாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மரியசெல்வம், சிம்ரன்கபூர், மன்திப்கபூர் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Related Stories: