நாகர்கோவில் - நெல்லை பயணம் கண்டக்டர் இல்லாத பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷம்: போலீசுக்கு தகவல் பறந்ததால் வாலிபர் சிக்கினார்

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவ, மாணவிகள் சிலர் குமரி மாவட்டத்திற்கு ஆய்வுக்காக சென்று விட்டு நேற்றிரவு  7 மணிக்கு நெல்லைக்கு புறப்பட்டனர். நாகர்கோவிலில் இருந்து நெல்லை வந்த ஒன் டூ ஒன் பஸ்சில் ஏறினர். அந்த பஸ்சில் கண்டக்டர் கிடையாது. பஸ் டிரைவர் சீட்டிற்கு பின்புறம் உள்ள இருக்கையில் மாணவிகள் அமர்ந்திருந்தனர். அதற்கு அடுத்த சீட்டில் அமர்ந்திருந்த போதை வாலிபர் மாணவிகளிடம் சில்மிஷம் செய்யத் தொடங்கினார். இதனால் அந்த மாணவிகள் உடன் வந்த மாணவர்களிடம் கூறினர்.மாணவர்களும் டிரைவரும் அந்த நபரை எச்சரித்தனர். அதன் பின்னரும் அவரது சேட்டை தொடர்ந்தது. இதையடுத்து அழகு என்ற எம்பில் மாணவர் நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் கைபேசி எண்ணிற்கு இதுகுறித்து தகவல் அனுப்பினார்.

Advertising
Advertising

அந்த பஸ் நிலையத்திற்குள் வந்ததும் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை தயாராக அங்கு நின்றிருந்த போலீசார் பிடித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மேலும் வெளியூர்களுக்கு செல்லவேண்டிய மற்ற மாணவிகளை அவர்கள் செல்லும் பஸ்களில் ஏற்றிவிட்ட பின்னரே திரும்பிச் சென்றனர். பின்னர் போதை தெளிந்த அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் கூறுகையில், ‘எந்த பிரச்னையாக இருந்தாலும் மாணவிகள் தயங்கவேண்டாம். உடனடியாக  தகவல் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்போம்’ என்றார்.

Related Stories: