திருட்டு பொருளை விற்ற பணத்தை பங்கு போடுவதில் தகராறு சிறுவனை கொன்று குப்பையில் புதைப்பு : 4 பேர் போலீசில் சிக்கினர்

திருச்சி: திருச்சி மேலஅம்பிகாபுரம் அண்ணாநகரை சேர்ந்தவர் அலியார் முகமது. இவரது மகன் அப்துல்வாகித் (11). கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு செல்வதாக கூறி சென்றவன் வீடு திரும்பவில்லை. பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார்  தேடி வந்தனர்.

விசாரணையில், அப்துல்வாகித் பள்ளிக்கு சரிவர செல்லாமல் கோழி, ஆடு திருட்டு மற்றும் இரும்பு திருட்டில் ஈடுபட்டு வந்ததாகவும், அதே பகுதியை சேர்ந்த சரவணன் (19), கணேசன்(19) உள்பட 4 பேர்  சேர்ந்து திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவன் மாயமான அன்று 4 பேருடன் வாகித் இருந்ததை அறிந்த போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் கூறுகையில், வாகித் நண்பர்கள் 4 பேருடன் திருடிய பொருளை விற்றதில் கிடைத்த பணத்தை கடந்த 3ம் தேதி பங்கு பிரிக்கும்போது  தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் 4 பேரும் சேர்ந்து அப்துல்வாகித்தை தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயமடைந்த வாகித் இறந்துள்ளான். 4 பேரும் சேர்ந்து சடலத்தை எப்படி அகற்றுவது என தெரியாமல் தவித்த நிலையில்  அதே பகுதியை சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் கயல்விழி சேகர் மகன் இளவரசனிடம் கூறியுள்ளனர். அவரது  ஆலோசனையின் பேரில் குப்பையில் இருந்து வழிந்து  பள்ளத்திற்கு செல்லும் பகுதியில் உடலை போட்டு குப்பையால் மூடிவிட்டு சென்றது தெரியவந்தது. கொல்லப்பட்ட சிறுவன் உள்பட 5 பேரும் அடிக்கடி பன்றி பிடிப்பதற்காக இளவரசனிடம் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். இவ்வாறு போலீசார் கூறினர். இதைத்தொடர்ந்து அப்பகுதிக்கு ெசன்று சோதனை நடத்தி, நேற்று இரவு வாகித் உடல் லேசாக அழுகிய நிலையில் மீட்டனர். அதிமுக மாஜி கவுன்சிலர் மகன் இளவரசனை மட்டும் விடுவித்து, மற்ற 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>