திருச்சியில் மாயமான 12 வயது சிறுவன் அடித்துக் கொலை: அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 4 பேர் கைது

அரியமங்கலம்: திருச்சியில் மாயமான 12 வயது சிறுவனை அவரது நண்பர்களே அடித்து கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் உள்பட 4 பேரை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி மாவட்டம் அரியமங்கலம் திடீர் நகர் பெரியார் தெருவை சேர்ந்த அலியார்-மெகர் நிஷா தம்பதியின் மகன் அப்துல் வாஹித்(12). அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்த வாஹித்துக்கு படிப்பு சரியாக வராததால் இடையில் படிப்பை நிறுத்தியதுடன் வீட்டில் இருந்து வந்துள்ளான். இந்த நிலையில், கடந்த 3ம் தேதி மாலை 7 மணியளவில், தனது தாயிடம் ரூ.10 வாங்கிச்சென்ற அப்துல் வாஹித் திடீரென காணாமல் போனான்.

உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிய தந்தை அலியார் இறுதியாக திருச்சி அரியமங்கலம் காவல்நிலையத்தில் கடந்த கடந்த 6ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். அப்போது அப்துல் வாஹித் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சேகர்-அதிமுக முன்னாள் கவுன்சிலர் கயல்விழி தம்பதியின் மகன் உள்ளிட்ட சில சிறுவர்களுடன் கடைசியாக சுற்றித்திரிந்ததை கண்டதாக சிலர் தெரிவித்த அடிப்படையில் போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். முன்னாள் கவுன்சிலர் மகன் இளவரசன் (18), சரவணன் (19), லோகேஷ் (16), வீராசாமி (16) ஆகிய 4 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், சிறுவன் அப்துல் வாஹித்தை அதே பகுதியில் உள்ள பன்றி பண்ணைக்கு அழைத்து சென்று அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

தங்களுடன் திரிந்த சிறுவனை தன்பாலின உறவுக்கு கட்டாயப்படுத்தியதால், சிறுவன் வாஹித் ஒப்புக்கொள்ளாமல் சத்தம் போட்டுள்ளான். இதனால் சிறுவனை அடித்தே கொன்றதாக தெரிவித்துள்ளதாக போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில், அரியமங்கலம் பகுதியில் உள்ள குப்பைக்கிடங்கில் சிறுவனின் உடலை புதைத்துவிட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இளவரசன் மற்றும் கூட்டாளிகளை போலீசார் குப்பைக் கிடங்கிற்கு அழைத்து சென்று உடலை தோண்டி எடுக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வாஹித்தின் உடலை மீட்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யவும் போலீசார், மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Related Stories:

>