தாம்பரம் அருகே நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து வெங்காய மூட்டை திருட்டு

தாம்பரம்: வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாலும், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாலும் மக்கள் தினசரி சமையல் தேவைக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஓட்டல்களில் உணவுகளின் விலையும் அதிகரித்துள்ளது. வெங்காய விலை உயர்வை பிரதி பலிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வெளியாகி வருகிறது. சமீபத்தில், மதுரையில் உள்ள கடையில் முதியவர் ஒருவர் வெங்காயம் திருடிய சம்பவம் பரவலாக பேசப்பட்டது. மதுரை, கோமதிபுரம் தாழைவீதியில் பிரபல  பலசரக்கு கடை உள்ளது. இந்த கடைக்கு, நேற்று முன்தினம் காலை வந்த முதியவர் ஒருவர்,  அங்குள்ள ஊழியர்களிடம், ‘‘அரிசி வாங்க கடை உரிமையாளரிடம் ரூ.1500 பணம்  கொடுத்திருக்கிறேன். அந்த பணத்தை வாங்கிக் கொடுங்கள், அரிசியை அப்புறம்  வந்து வாங்கிக் கொள்கிறேன்’’ என கூறியுள்ளார். அவரது பேச்சை நம்பிய  ஊழியர்கள் கல்லாவில் இருந்து ரூ.1500 பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளனர்.  பின்னர், முதியவர் சென்றுவிட்டார்.

Advertising
Advertising

பணம் கொடுத்த விபரத்தை  ஊழியர்கள், உரிமையாளரிடம் தெரிவித்தனர். ஆனால் அவரோ, ‘யார் என்று  தெரியவில்லை’ என கூறினார். உடனே உரிமையாளர் வந்து, கடையில் இருந்த சிசிடிவி  கேமராக்களை ஆய்வு செய்தார். அப்போது கடைக்கு வந்த முதியவர் பணத்தை  வாங்கியதுடன், 2 கிலோ வெங்காயத்தை நைசாக திருடிச்செல்லும் காட்சிகளும்  பதிவாகி இருந்தது. பிற்பகலில் மீண்டும் முதியவர் கடைக்கு வந்து, ‘சீரகம்  வேண்டும்’ என கேட்டுள்ளார். அப்போது ஊழியர்கள் அவரை மடக்கிப் பிடித்து  அண்ணாநகர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அப்துல் ரகுமான் (50) எனவும்  பிரியாணி செய்வதற்காக வெங்காயம் திருடிச்சென்றதை ஒப்புக்கொண்டார்.  பின்னர், அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில், தாம்பரம் அருகே ஒரு கடையின் பூட்டை உடைத்து வெங்காய மூட்டையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் தெரியவந்துள்ளது.

திருநெல்வேலியை சேர்ந்தவர் பாலசந்தர் (36). சேலையூர் அடுத்த அகரம் தென், அவ்வையார் தெருவில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று காலை கடையை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கடையில் இருந்த 15 ஆயிரம், இரண்டு 25 கிலோ அரிசி மூட்டைகள், அரை மூட்டை வெங்காயம் மற்றும் மளிகை பொருட்கள் திருடப்பட்டிருந்தன. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலசந்தர் சம்பவம் குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.

Related Stories: