வைகை ஆற்றின் நடுவே கட்டப்பட்டு 134வது ஆண்டில் அடியெடுத்து வைத்த ஏ.வி. மேம்பாலம்: 2 தடுப்பணையால் பாலத்திற்கு ஆபத்தா?

மதுரை: மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஏ.வி. மேம்பாலம் 134வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. தற்போது பாலத்தின் அருகே 2 தடுப்பணை கட்டியதால், பாலத்திற்கு ஆபத்தா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.    தமிழ் சங்கம் வளர்த்த மதுரை நகரம் தொண்மையான நகரமாக விளங்குகிறது. பாண்டிய மன்னர் காலத்திற்கு பின்பு பல்வேறு அரசர்கள் இங்கு ஆட்சி செய்தனர். திருமலை நாயக்கரும் இங்கு ஆட்சி செய்துள்ளார். இவருடைய வம்சத்தில் வந்த மீனாட்சி அரசிக்கும், ராஜகுமாரருக்கும் இடையே ஆட்சியில் மோதல் ஏற்பட்டது. அந்த நேரத்தில் டெல்லி ஆற்காடு நவாப் வரி கேட்டு மதுரை வருகிறார். இவர்களுக்குள் ஏற்பட்ட மோதலை பயன்படுத்தி மதுரையை ஆற்காடு நவாப் தனது வசமாக்கினார். இவரை தொடர்ந்து சாந்தாசாகிப், மருதநாயகம் உள்ளிட்டோர் மதுரையை ஆட்சி செய்தனர். இங்கிலாந்தில் இருந்து வாணிபம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியும் மதுரையை ஆட்சி செய்தது. இவர்கள் ஆட்சியில்தான் மன்னர் ஆட்சியை அகற்றி இவர்களின் நேரடி கட்டுப்பாட்டில் கலெக்டர் ஆட்சி உருவானது. 1790ல் செப்.6ம் தேதி மைக்கேல் லியோ மதுரையின் முதல் கலெக்டராக பதவி ஏற்கிறார். இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டில் மதுரை நகரம் வந்தவுடன் 1837ல் ஜான்பிளாக்கெயில் மதுரையில் உள்ள மன்னர்களின் கோட்டை சுவரை இடித்து நகரை விரிவாக்கம் செய்கிறார்.

  ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் தெப்பக்குளம் பகுதியில் குடியிருந்து ஆட்சி செய்தனர். அப்போது கலெக்டர் அலுவலகம் தியாகராசர் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இயங்கியதாக கூறப்படுகிறது. 1857ல் முதல் சுதந்திர போர் ஏற்பட்டவுடன் இந்தியர்கள் நடுவில் குடியிருந்தால், நமக்கு ஆபத்து என உணர்ந்து ஆங்கிலேயர்கள் வைகை ஆற்றின் வடபகுதிக்கு தனது ஆட்சிக்கான அலுவலகத்தை மாற்ற முடிவு செய்தனர்.  இதற்காக வைகை ஆற்றின் தென்பகுதியையும், வடபகுதியையும் இணைக்க சுமார் 300 மீட்டர் நீளம் உள்ள வைகை ஆற்றின் குறுக்கே 14 தூண்கள் அமைத்து புதிய பாலத்தை, 1884ல் கலெக்டராக இருந்த ஆல்பர்ட் விக்டர் கட்டத்துவங்கினர். கட்டுமான பணி சுமார் இரண்டரை ஆண்டுகளில் முடிந்தது. 14 தூண்களும், கரும்பாறையின் கற்கள் கொண்டு கட்டப்பட்டது.  பாலம் கட்டுமான பணி முடிந்து, 1886ம் ஆண்டு டிச.8ம் தேதி பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்பட்டது. இது மதுரையில் வைகை ஆற்றின் குறுக்கே  கட்டப்பட்ட முதல் மேம்பாலம். அன்று முதல் வைகையில் பெரிய அளவில் வெள்ளம் வந்தாலும், இந்த பாலம் எந்த பழுதும் இன்றி இன்றுவரை கம்பீரமாக காட்சி தருகிறது. இப்பாலம் நேற்றுடன் (டிச.8) தனது 133 ஆண்டை நிறைவு செய்து, 134வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

 இது குறித்து சமூக ஆர்வலர் வழக்கறிஞர் கனகவேல்பாண்டியன் கூறுகையில், ‘ஏ.வி. பாலம் கட்டும் போது, அது நூறு ஆண்டுகள் நல்ல நிலையில் இருக்கும் என முன்பு பொறியாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், நேற்று 134வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. எத்தனை வெள்ளம் வந்தாலும், ஆற்றின் இரண்டு கரையில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து இணைப்பை கொடுத்து வருவது இப்பாலம் மட்டுமே. இன்றும் தினமும் பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் பாலத்தில் செல்கிறது. ஏற்கனவே இரண்டு வளைவில் பழுது ஏற்பட்டு சரி செய்யப்பட்டது. பாலத்தின் அருகே தற்போது இரண்டு தடுப்பணையை கட்டியுள்ளனர். இதனால், பாலத்தின் கீழே நிரந்தரமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது.  இதனால், பாலத்தின் தூண்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பதை பொதுப்பணித்துறையினர் பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பாலத்தை முறையாக பராமரித்தால், மேலும்  பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும்’ என்றார்.

Related Stories: