பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க இப்போதைக்கு சட்டத்தை காட்டிலும் அரசியல் துணிவுதான் தேவை: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கருத்து

புனே: ‘‘பெண்களுக்கு ஏதிரான கொடுமைகளை தடுக்க சட்டங்களை கொண்டு வந்தால் மட்டும் போதாது. அரசியல் துணிவு மற்றும் நிர்வாக திறன் மட்டுமே இந்த சமூக தீமையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான தீர்வாக இருக்க முடியும்’’ என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண் கடந்த வியாழக்கிழமை காலையில் நீதிமன்ற விசாரணைக்காக செல்லும்போது, அவரை பலாத்காரம் செய்த இருவர் உட்பட 5 பேர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர். அந்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு இறந்தார்.இதேபோல ஐதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், நேற்று புனேயில் உள்ள சிம்போசிஸ் சர்வதேச பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, இந்த சம்பவங்கள் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர் பேசியதாவது:சமீபத்தில் நடந்துள்ள சம்பவங்கள் உண்மையில் வெட்கப்பட வேண்டியவை. இது நம் அனைவருக்கும் ஒரு சவால் ஆகும். இதுபோன்ற கொடுமைகளை தடுத்து நிறுத்த சபதம் ஏற்போம். நிர்பயா விவகாரத்தில் நாம் சட்டம் கொண்டு வந்தோம். என்ன ஆனது? பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டதா? புதிய சட்டங்களுக்கு நான் எதிரானவன் அல்ல. ஆனால் இதுபோன்ற சமூக கொடுமைகளை தடுத்து நிறுத்த சட்டங்களைக் காட்டிலும் அரசியல் துணிவு மற்றும் நிர்வாக திறன்தான் இப்போதைய தேவை என்பதே என் கருத்து என்றார்.

Related Stories:

>