தனியார் பல்கலை கல்விக் கட்டண விவகாரம்: மத்திய அரசு முடிவுக்கு பெண் அதிகாரி எதிர்ப்பு...ட்விட்டில் கருத்து தெரிவித்துள்ளதால் சர்ச்சை

புதுடெல்லி: பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று இருந்த ஷமிகா ரவி, மத்திய அரசின் கொள்கை முடிவுகள் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து தொடர்ந்து விமர்சித்து வந்தார். முன்னதாக, பொருளாதார  மந்தநிலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,  ‘நாட்டின்  பொருளாதாரத்தில்  மந்தநிலை ஏற்பட்டுள்ளது’ என்று பதிவிட்டார். இவ்வாறு வெளிப்படையாக  கருத்துகளை தெரிவித்து வந்தநிலையில், அவர்  பிரதமரின் பொருளாதார  ஆலோசனைக்  குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் தொடர்ந்து தனது கருத்துகளை வெளிப்படையாக  ட்விட்டரில் தெரிவித்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது தனியார் பல்கலைக் கழகங்களின் கட்டணத்தை முறைப்படுத்தப் போவதாக மத்திய அரசு  எடுத்த முடிவு குறித்து ஷமிகா ரவி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, ஷமிகா கூறியதாவது:  தனியார் பல்கலைக்  கழகங்களின் கட்டணத்தை முறைப்படுத்துதல் என்பது ஒரு தவறான முடிவு. இந்த விஷயங்களை செய்வதற்கு பதிலாக அரசு  பல்கலைக் கழகங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அத்துடன் தனியார் பல்கலைக் கழகங்களுக்கு முழு  சுதந்திரம் அளிக்க வேண்டும். இந்திய  உயர்கல்வி வளர வேண்டும் என்றால், இம்மாதிரியான சோசியலிஷ கொள்கைகளை அரசு கைவிட வேண்டும். தரம் இருக்கும் பட்சத்தில் அதிக செலவு  செய்து படிக்க வைக்க மக்கள் தயாராக உள்ளனர்.

தனியார் கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணங்கள் வசூலித்தாலும், அங்கே படிக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. அதனால்தான், தனியார்  பல்கலைக் கழகங்களுக்கு அதிக மவுசு இருக்கிறது. சிலர் உயர் கல்வியை அனைவருக்கும்  இலவசமாக வழங்க வேண்டும் என கூறுகிறார்கள். பள்ளிக்  கல்வி வரை அனைவருக்கும் இலவசம் என்பதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால், உயர் கல்வியை அப்படி எல்லோருக்கும் இலவசமாக கொடுக்க  முடியாது. இவ்வாறு அவர்  தெரிவித்தார்.

இந்நிலையில், ஷமிகாவின் கருத்துக்கு, இணையத்தில் பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் ஒருவர், ‘நீங்கள்  எல்லா வழிகளிலும் வளர்ச்சி பெற்றுவிட்டீர். நியூயார்க் சென்று பி.எச்டி பட்டம்  பெற்றுவிட்டீர். ஏழை மக்கள் கல்லூரிக் கல்விக்குத் தகுதியற்றவர்கள்  என்பது போல் சொல்கின்றீர்’ என்பது உள்பட பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories: