சேலம் உயிரியல் பூங்காவில் பாகனை மிதித்து கொன்ற மதுரை ஆண்டாள் யானை

சேலம்: மதுரை அழகர் கோயில் ஆண்டாள் யானைக்கு, சுவாசக்கோளாறு மற்றும் புற்றுநோய் பாதிப்பு இருந்ததால், அந்த யானையை, சமவெளி பகுதியில் வைத்து பராமரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி 2009ல் சேலம் குரும்பப்பட்டியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு ஆண்டாள் யானை கொண்டு வரப்பட்டது. யானையை பராமரிக்க பொள்ளாச்சி டாப்சிலிப் பகுதியைச் சேர்ந்த காளியப்பன்(45) என்பவர் பாகனாகவும், பழனி உதவியாளராகவும் செயல்பட்டு வந்தனர். நேற்று மாலை 5.15 மணியளவில், யானைக்கு கண்ணில் ஏற்பட்ட பாதிப்பை பரிசோதனை செய்யும் பணியில் டாக்டர் பிரகாஷ் ஈடுபட்டார். அப்போது, திடீரென வழக்கத்திற்கு மாறாக ஆக்ரோஷமடைந்த யானை, தனது தும்பிக்கையால் டாக்டரை இழுக்க முயன்றது. அதிர்ச்சியடைந்த பாகன் காளியப்பன், வேகமாக செயல்பட்டு, யானையின் பிடியில் இருந்து டாக்டரை விடுவித்தார்.

ஆனால், யானை காளியப்பனை தும்பிக்கையால் இழுத்து கீழே தள்ளி காலால் மிதித்து கொன்றது. யானை ஆக்ரோஷமாக இருப்பதால்,  காளியப்பனின் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. யானையின் பின்னங்காலில் கட்டப்பட்டிருந்த சங்கிலி வலுவிழந்து இருக்குமேயானால், அருகில் செல்பவர்களையும் யானை தாக்கும் அபாயம் உள்ளது. இதையடுத்து, யானைக்கு மயக்க ஊசி செலுத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். உயிரிழந்த பாகன் காளியப்பனுக்கு சபரி என்ற மனைவியும், 3 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். முகாமிற்கு அனுப்ப பரிந்துரை: ஆண்டாள் யானைக்கு தற்போது 68 வயதாகிறது. வயது முதிர்ந்து விட்டதால், இந்த யானையை முகாமிற்கு அனுப்ப, தேசிய உயிரியல் பூங்கா ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஏற்கனவே 4 பேரை கொன்ற யானை

ஆண்டாள் யானை, இதற்கு முன் மதுரை அழகர் கோயிலில் இருந்த போது, 3 பேரை தாக்கிக் கொன்றுள்ளது. கடந்த 2009ம் ஆண்டு, சேலம் குரும்பப்பட்டிக்கு கொண்டு வரப்பட்ட சில ஆண்டுகளில், பூங்காவில் பணியாற்றி வந்த பெண் ஊழியர் பத்மினி என்பவரை தாக்கி கொன்றுள்ளது.  தற்போது, 5வது நபராக காளியப்பன் இந்த யானையிடம் சிக்கி பலியாகியுள்ளார்.

Related Stories: