மயிலாடுதுறையில் பரபரப்பு: ரேஷன் அரிசியை நடுரோட்டில் கொட்டிய சமையல்காரர்: வைரலாக பரவியதால் வழக்குப்பதிவு

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள குத்தாலம் புதுசாலிய தெருவை சேர்ந்தவர் ரமணி (60). இவர் சமையல் வேலை செய்து வருகிறார்.  இவர் குத்தாலம் கடைவீதியில் உள்ள  ரேஷன்  கடையில் இலவச அரிசி 20 கிலோவை வாங்கினார். சிறிது தூரம் சென்றவுடன்,  சைக்கிளை நிறுத்திவிட்டு அரிசி மூட்டையை அவிழ்த்து சாலைஓரத்தில் நடந்தபடியே கீழே கொட்டினார். இதைக் கண்ட ஒரு பெண், ஏன் இதை கொட்டுறீங்க என்று கேட்டதற்கு, என்னம்மா, அரிசி என்ற பெயரில்  குண்டரிசி கொடுக்குறான். அதை சாப்பிட முடியுமா, சோறு வடிச்சி, மனுஷன் சாப்பிட முடியாது. ஆடு, மாடாவது திங்கட்டும்  என்று கூறினார்.

இதை வீடியோ எடுத்த நபர் ஒருவரை பார்த்து, எடுத்து விட்டியாடா வாட்ஸ்அப்பில் அனுப்பு என்று கூறி சென்றுவிட்டார்.  ரேஷன் அரிசி கொட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து குத்தாலம் வட்ட வழங்கல் அலுவலர் குறிப்பிட்ட ரேஷன்கடை ஊழியரிடம் விசாரணை நடத்தினார். இந்த செயலை செய்தவர்மீது நடவடிக்கை எடுக்க கோரினார். ரேஷன் கடை ஊழியர் அறிவழகன் நேற்று மாலை குத்தாலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் அரசு திட்டத்தை அவமானப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்து ரமணியை தேடி வருகின்றனர்.

Related Stories: