தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தில் காகிதமில்லா சட்டமன்றம் என்ற நிலையை விரைவில் அடைந்திட ஒத்துழையுங்கள்: சபாநாயகர் தனபால் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகத்தில் காகிதமில்லா சட்டமன்றம் என்ற நிலையை விரைவில் அடைந்திட ஒத்துழையுங்கள் என்று சபாநாயகர் தனபால் கூறினார்.தமிழக சட்டமன்ற பேரவை செயலகத்தில், காகிதமில்லா சட்டமன்றம் என்னும் இலக்கை முழுஅளவில் அடையும் வகையில், இ-விதான் திட்டத்துக்கான பயிற்சி வகுப்பு நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது. சட்டமன்ற பேரவை செயலக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சி வகுப்பை சபாநாயகர் தனபால் தொடங்கி வைத்து பேசியதாவது:காகிதமில்லா சட்டமன்றம் என்கிற திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முனைப்புடன் நடந்து கொண்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. காகிதமில்லா சட்டமன்றம் என்னும் திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் காகித  பயன்பாடு வெகுவாக குறைக்கப்படும். இதேபோன்று, அஞ்சலக செலவு உள்ளிட்ட இதர செலவுகளும் குறைக்கப்படும். இதன்மூலம் பெரிய அளவில் சேமிப்பு ஏற்படுவதோடு வேகமாக தொடர்பு கொள்ளுதல் மற்றும் முடிவுகள் எடுக்கவும்  வழிவகுக்கும்.

பேரவை கூட்டம் நடைபெறும் நாட்களில், பேரவை நிகழ்ச்சி நிரல், வினா பட்டியல், மானிய கோரிக்கைகளின் கொள்கை விளக்க குறிப்புகள், குழு கூட்டங்கள் குறித்த குறிப்புகள் ஆகியவை மின்னஞ்சல் மூலம் உறுப்பினர்களுக்கு முன்னதாகவே  அனுப்பி வைக்கப்படும்.

உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 14 மற்றும் 15வது சட்ட பேரவைகளின் 155 நாட்களுக்கான அதிகாரப்பூர்வ அச்சிட்ட நடவடிக்கை குறிப்புகள் மற்றும் 14வது பேரவையின் பேரவை தலைவரின்  தீர்ப்புரைகள்-குறிப்புரைகள் அடங்கிய தொகுப்பு பிடிஎப் வடிவில் பேரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 15வது பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பெற்ற உறுப்பினர்களின் வாழ்க்கை குறிப்புகள் அடங்கிய “யார்-எவர்” பேரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பேரவை செயலக பணியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த கருத்தரங்கில் கலந்துகொள்ளும் பணியாளர்கள், பயிற்சியை நல்லமுறையில் பெற்று, அதன்மூலம் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலகம் காகிதமில்லா சட்டமன்றம் என்ற நிலையை விரைவில் அடைந்திட, முழு ஒத்துழைப்புடன் பணிபுரிந்திட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் பேரவை துணை தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: