வாடிப்பட்டி அருகே ரேஷன் கடையான சமுதாயக்கூடம்: பொதுமக்கள் அவதி

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே ரேஷன் கடை இடிந்து பல ஆண்டுகளாகியும் சரிசெய்யப்படாததால் சமுதாயக்கூடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இதனால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் கச்சைகட்டி ஊராட்சிக்குட்பட்டது எல்லையூர் கிராமம். 400 குடும்பங்கள் வசித்து வரும் இக்கிராமத்தில் கட்சைகட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி மூலம் அரசு நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுக்கு முன்பு ரேஷன் கடை கட்டிடத்தின் பின்பக்க சுவர் இடிந்து விழுந்தது.

இதையடுத்து குடிமை பொருட்கள் எல்லையூரில் உள்ள சமுதாயக்கூடத்தில் வைத்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால்  ஆண்டுகளாகியும் இடிந்த ரேஷன் கடையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. ரேஷன் பொருட்கள் அனைத்தும் சமுதாயக்கூடத்தில் வைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் எந்த ஒரு நிகழ்ச்சியையும் சமுதாயக்கூடத்தில் நடத்த முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இடிந்த ரேஷன் கடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: