மத்திய பிரதேசம் வியாபம் முறைகேடு வழக்கு: குற்றவாளிகள் 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சிபிஐ நீதிமன்றம்

போபால்: மத்திய பிரதேசம் வியாபம் முறைகேடு வழக்கில் 30 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் 30 பேருக்கு தலா 7 ஆண்டு சிறை, மற்றொருவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற வியாபம் முறைகேடு வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் சிபிஐ நீதிமன்றம் கடந்த 21 தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோரைத் தேர்வுசெய்வதற்கான தேர்வுகளை மத்தியப் பிரதேச தொழில்முறைத் தேர்வாணையம் (Madhya Pradesh Professional Examination Board) நடத்துகிறது. இந்த ஆணையம், ‘வியாபம்’ (VYAPAM- VYAVSAYIK PAREEKSHA MANDAL) என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது. வியாபம் நடத்துகிற போட்டித் தேர்வுகளின் மூலமாக முறைகேடான வழிகளில் அரசுப் பணிகளுக்கு ஏராளமானோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2013ம் ஆண்டு மாநில தொழிற்கல்வி தேர்வு வாரியம் எனப்படும் வியாபம் காவல்துறை காவலர் பணிக்காக தேர்வு நடத்தியது. இதில், ஆள்மாறாட்டம் செய்து சிலர் மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. இந்த முறைகேடுகளில் ம.பி-யின் அன்றைய ஆளுநர் ராம் நரேஷ் யாதவ் தொடங்கி பல அதிகார மையங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும், இதில் 20,000 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் விளையாடியதாகவும் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின. இந்த ஊழல் தொடர்பாக, ஆள்மாறாட்டம் செய்தவர்கள், இடைத்தரகர்கள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். முன்னாள் கல்வி அமைச்சர் லட்சுமி காந்த் ஷர்மா, ஐ.பி.எஸ் அதிகாரி ஆர்.கே.ஷிவாரே, ஜெகதீஷ் சாகர், டாக்டர் வினோத் பண்டாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். இதையடுத்து, வியாபம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்குமாறு 2015-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

சிபிஐ  விசாரணை நடத்தியதில் 12 பேர் ஆள்மாறாட்டம் செய்து வேறு ஒருவருக்காக தேர்வு எழுதியதாக கைது செய்யப்பட்டனர். அவர்களில் 6 பேர் போபால் பகுதியிலும், மீதமுள்ள 6 பேர் தாதியா பகுதிகளில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அப்போது, பதிவு செய்த வழக்கில் விசாரணை நிறைவடைந்து கடந்த 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஆள்மாறாட்டம் செய்த 12 பேர், இடைத்தரகர்கள் 7 பேர் உள்பட 31 பேரை குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிபதி எஸ்.பி.சாஹு தீர்ப்பளித்தார். மேலும், 31 பேரின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. அதன்படி 31 பேரின் தண்டனையை சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 31 பேரில் 30 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையையும், ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையையும் சிபிஐ நீதிமன்றம் விதித்துள்ளது.

Related Stories: