சென்னைக்கு 3வது இடம்; சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது: திருவனந்தபுரம் முதலிடம்

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. 16 லட்சத்து 21 ஆயிரத்து 224 மாணவ, மாணவியர் எழுதிய இந்த தேர்வின் மொத்த தேர்ச்சி வீதம் 87.98% என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. இந்த ஆண்டும் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. சென்னை மண்டலம் 3ம் இடம் பிடித்து சாதித்துள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் இயங்கும் 18 ஆயிரத்து 417 பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்த மாணவ மாணவியருக்கான பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 2ம் தேதி வரை நடந்தது. நாடு முழுவதும் 7126 தேர்வு மையங்களில் 16 லட்சத்து 21 ஆயிரத்து 224 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் நேற்று காலையில் வெளியாகின.

தேர்வு எழுதியோரில் 14 லட்சத்து 26 ஆயிரத்து 420 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி 87.98 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டு தேர்ச்சியை விட 0.65% அதிகம். சிபிஎஸ்இ வாரியத்தில் அடங்கிய 17 மண்டலங்களில் திருவனந்தபுரம் 99.91 சதவீத தேர்ச்சி பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது. விஜயவாடா 99.04% பெற்று இரண்டாம் இடத்தையும், சென்னை 98.47% பிடித்து மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. பிரயாக்ராஜ் 78.25% பெற்று கடைசி இடத்தில் உள்ளன.

இந்தியாவை தவிர வெளிநாட்டில் 20 ஆயிரத்து 355 பேர் இத் தேர்வில் பங்கேற்று 19 ஆயிரத்து 508 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 95.84%. நடப்பு 2024ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவியரில் 91.52 சதவீதம் மாணவியரும், 85.12% சதவீதம் மாணவர்களும், 50% மாற்றுப் பாலினத்தவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மாணவர்களை விட மாணவியரே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நிர்வாக ரீதியாக அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் விவரம்:
சிடிஎஸ்ஏ பள்ளிகள் 99.23%, ஜவகர்லால் நேரு வித்யாலயா பள்ளிகள் 98.90%, கேந்திரவித்யாலயா பள்ளிகள் 98.81%, அரசு நிதியுதவி பெறும் சிபிஎஸ்இ பள்ளிகள் 91.42%, அரசுப் பள்ளிகள் 88.23%, தனியார் பள்ளிகள் 87.70% அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சியை எட்டியுள்ளன. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு தேர்வில் மாற்றுத் திறன் கொண்ட 5019 பேர் தேர்வு எழுதியதில் 4548 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 90.62%.

இந்த தேர்வில் 90% மற்றும் அதற்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்று 1 லட்சத்து 16 ஆயிரத்து 145 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 7.16%. 95% மற்றும் அதற்கும் மேலும் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 24 ஆயிரத்து 68 பேர். மொத்த தேர்ச்சி வீதம் 1.48%. தேர்ச்சி பெற்றவர்கள் தவிர 1 லட்சத்து 22 ஆயிரத்து 170 பேர் மீண்டும் அனைத்து பாடங்களையும் தேர்வு எழுத வேண்டிய நிலையில் உள்ளனர்.

10ம் வகுப்பு தேர்வில் 93.60% பேர் தேர்ச்சி
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் நேற்று மதியம் வெளியானது. 20.95 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி வீதம் 93.60%. நாட்டிலேயே திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை 3ம் இடம் பிடித்துள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்கியுள்ளன.

நாடு முழுவதும் 22 லட்சத்து 38 ஆயிரத்து 827 பேர் தேர்வு எழுதினர். இதில் 20 லட்சத்து 95 ஆயிரத்து 467 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருவனந்தபுரம் மண்டலம் 99.75% தேர்ச்சி பெற்று நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. விஜயவாடா மண்டலம் 99.60% பெற்று இரண்டாவது இடத்திலும், சென்னை மண்டலம் 99.30% பெற்று 3வது இடத்திலும், கவுஹாத்தி மண்டலம் 77.94% தேர்ச்சி பெற்று கடைசி இடத்திலும் உள்ளன. 10ம் வகுப்பு தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் மாணவர்கள் 92.71%, மாணவியர் 94.75%, மாற்றுப் பாலினத்தவர் 91.30% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களைவிட மாணவியர் 2.04% கூடுதலாக தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

நிர்வாக ரீதியாக அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம்:
ஜவகர்லால் நேரு வித்யாலயா பள்ளிகள் 99.09%, கேந்திரவித்யாலயா பள்ளிகள் 99.09%, தனியார் பள்ளிகள் 94.54%, சிடிஎஸ்ஏ பள்ளிகள் 94.40%, அரசுப் பள்ளிகள் 86.72%, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 83.95% தேர்ச்சி பெற்றுள்ளன. தனித்தேவை உள்ள மாணவர்கள் (CWSN) 8198 பேர் இத் தேர்வில் பங்கேற்றனர். இதில் 7661 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி வீதம் 93.45%.

The post சென்னைக்கு 3வது இடம்; சிபிஎஸ்இ 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது: திருவனந்தபுரம் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: