அரசியலில் நுழையும் ஆசை ஒரு போதும் இருந்ததில்லை: பிரதமர் மோடி மனம் திறந்த பேச்சு

புதுடெல்லி: ‘‘அரசியலில் நுழையும் ஆசை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. ஆனால், இன்று நான் அதில் ஒரு அங்கமாகிவிட்டேன். மக்களுக்காக என்னால் முடிந்தளவு சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்,’’ என மன்-கி-பாத் நிகழ்ச்சியில் என்சிசி மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறினார். மன்-கி-பாத் ரேடியோ நிகழ்ச்சியில் என்சிசி மாணவர்களிடம் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார். அப்போது அவர்கள் பல கேள்விகள் கேட்டனர். ‘நீங்கள் அரசியல்வாதி ஆகாமல் இருந்திருந்தால், நீங்கள் என்னவாக இருந்திருப்பீர்கள்?’ என ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார். இதற்கு மோடி அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:இது மிகவும் சிக்கலான கேள்வி. ஏனென்றால், ஒவ்வொரு குழந்தையும், வாழ்க்கையில் பல கட்டங்களை கடந்து செல்கிறது. சில நேரங்களில் ஒருவர் இப்படி ஆகவேண்டும் என விரும்புகிறார், சில நேரங்களில் ஒருவர் அப்படி ஆக வேண்டும் என விரும்புகிறார். ஆனால், அரசியலுக்குள் நுழைய வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை, இது பற்றி நான் நினைத்ததும் இல்லை. இது உண்மை.

ஆனால், நான் தற்போது அரசியல்வாதியாகி விட்டேன். நாட்டுக்காக எப்படி பணியாற்ற வேண்டும் என்றுதான் நான் எப்போதும் எண்ணிக் கொண்டு இருக்கிறேன். அரசியலில் சேராமல் இருந்திருந்தால், நான் என்ன செய்து கொண்டிருப்பேன் என்ற சிந்தனை எனக்கு ஒருபோதும் வந்ததில்லை. இப்போது, நான் எங்கு இருக்கிறேனோ, அந்த வாழ்க்கையை நான் முழுவதுமாக வாழவேண்டும், நாட்டுக்காக முழு மனதுடன் பணியாற்ற வேண்டும். அந்தப் பணிக்காகத்தான் நான் அர்ப்பணித்து கொண்டிருக்கிறேன்.  டிசம்பர் 7ம் தேதி கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. படைவீரர்களின் நலனுக்காக மக்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டும். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ‘பரிக்‌ஷா பீ சர்ச்சா’ நிகழ்ச்சிக்கான தேர்வு, சற்று முன் நடத்தப்பட்டதாக மாணவர்கள் புகார் கூறினர். அதனால், இந்த முறை இந்நிகழ்ச்சி ஜனவரியில் நடத்தப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

‘நூலில் சிக்கிய பறவையை காப்பாற்ற மரம் ஏறினேன்’

மன்-கி-பாத்தில் மோடி பேசுகையில், ‘‘நான் என்சிசி மாணவனாக இருந்தபோது, நான் ஒரு போதும் தண்டனை பெற்றதில்லை. நான் ஒழுக்கமான மாணவனாக இருந்தேன். என்சிசி முகாமில் ஒரு முறை இருக்கும்போது, நான் மரம் ஏறியதால் என்னை தவறாக புரிந்து கொண்டனர். எனக்கு தண்டனை கிடைக்கப் போகிறது என மற்றவர்கள் நினைத்தனர். பட்டத்தின் நூலில் சிக்கிய பறவையை காப்பாற்றுவதற்காக நான் மரம் ஏறினேன். பிறகு எனது செயல், எனக்கு பாராட்டை பெற்றுத் தந்தது,’’ என்றார்.

‘கூகுள் காரணமாக படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது’

மோடி மேலும் பேசுகையில், ‘‘எனக்கு சினிமா பார்ப்பதில் ஆர்வம் இல்லை. கொஞ்சம் நேரம் டி.வி பார்ப்பேன். முன்பு புத்தகங்கள் அதிகம் படிப்பேன். ஆனால், தற்போது அது குறைந்து விட்டது. கூகுள் இருப்பதன் காரணமாக படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது. அதில் எதைத் தேடினாலும், குறுக்குவழியில் உடனடியாக கிடைத்து விடுகிறது. அதனால், படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது,’’ என்றார்.

அயோத்தி தீர்ப்புக்குப்பின் பக்குவமாக நடந்து கொண்ட மக்களுக்கு நன்றி

மன்-கி-பாத் நிகழ்ச்சியில் மேலும் பேசிய மோடி, ‘‘அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த போது, நாட்டில் உள்ள 130 கோடி இந்தியர்களும், நாட்டு நலனை விட எதுவும் பெரியது அல்ல என்பதை மீண்டும் ஒரு முறை நிருபித்துள்ளனர். புதிய இந்தியா அமைதி, ஒற்றுமை மற்றும் நல்லெண்ணம் என்ற உணர்வுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எளிதாக மக்கள் அமைதியுடன் ஏற்றுக் கொண்டனர். மக்கள் காட்டிய இந்த பொறுமை, கட்டுப்பாடு, பக்குவத்துக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,’’ என்றார்.  

பாரதி கவிதையை கூறிய மோடி

தமிழ் புலவர்களின் கவிதைகள், திருக்குறளை போன்றவற்றை தனது பேச்சின் போது பிரதமர் மோடி சமீப காலமாக மேற்கொள் காட்டி வருகிறார். நேற்றைய மன்-கி-பாத் நிகழ்ச்சியில் கூட, நாட்டு மக்களின் ஒற்றுமையை போற்றும் மகாகவி பாரதியின் கவிதையை அவர் பாடினார்

‘முப்பது கோடி முகமுடையாள்

உயிர் மொய்ம்புற ஒன்றுடையாள்

இவள் செப்பு மொழிபதி னெட்டுடையாள்

எனில் சிந்தனை ஒன்றுடையாள்’

- என்ற கவிதையை என்சிசி மாணவர்களிடம் பிரதமர் மோடி தமிழில் மேற்கோள் காட்டினார்.

Related Stories: