மராட்டிய அரசியல் வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள்... காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் விமர்சனம்

புதுடெல்லி: மராட்டியத்தில் ரகசியமாக ஆளுநர் முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் குற்றம் சாட்டியுள்ளார். பெரும்பான்மை பலத்தை பாஜக நிரூபிக்குமா என்பது தெரியாமலேயே ஆட்சி அமைக்க மராட்டிய ஆளுநர் வழிவகுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பா.ஜனதா 105, சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றன. ஆட்சியமைக்க இந்த கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்த போதிலும், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பா.ஜனதா உடனான கூட்டணியை சிவசேனா முறித்துக் கொண்டதால் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்தது.

இந்நிலையில், முந்தைய சட்டப்பேரவையின் ஆயுட்காலம் முடிவுக்கு வந்ததால் கடந்த 12ம் தேதியன்று மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. பாஜவை ஒதுக்கி விட்டு, 54 இடங்களில் வெற்றி பெற்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரசுடன் புதிய கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. இந்நிலையில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவாருடன் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை அமைத்துள்ளது. இந்நிலையில் மராட்டியத்தில் பாஜக ஆட்சி அமைத்தது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது

மராட்டிய ஆளுநரும், பாஜகவும் எல்லை மீறி நடந்து வருவதாக குற்றம் சாட்டிய அகமது படேல், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவி ஏற்றது மராட்டிய அரசி்யல் வரலாற்றில் கரும்புள்ளி என்று கடுமையாக விமர்சித்தார். ஜனநாயகத்துக்கு எதிரான கட்சி என்பதை பாரதிய ஜனதா கட்சி மீண்டும் நிரூபித்துள்ளதாக அகமது படேல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் பேசிய அகமது படேல் ஆட்சியமைப்பதில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஒற்றுமையாக இருக்கிறது என்றும், நாங்கள் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தொடர்ந்து போராடுவோம் என்று அகமது படேல் தெரிவித்தார்.

Related Stories: