திருப்புத்தூர் அருகே இரணியூர் கோயிலில் 8 சிலைகள் மாயம்: சிலை திருட்டு தடுப்பு பிரிவில் புகார்

திருப்புத்தூர்: திருப்புத்தர் அருகே இரணியூர் கிராமத்தில் ஆட்கொண்டநாதர் கோயிலில் 8 சிலைகள் மாயமானதாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவில் புகார் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே இரணியூர் கிராமத்தில் ஆட்கொண்டநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோயில் சிதலமடைந்து இருந்ததால் 1941ம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டு வரை ஊர் நகரத்தார்களால் தற்போது உள்ள இடத்தில் ஆட்கொண்டநாதர் திருக்கோயில் கட்டப்பட்டது. காரைக்குடி இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் அறநிலையத்துறை செயல் அலுவலராக சுமதி பணியாற்றி வருகிறார். கடந்த இரண்டு மாத்திற்கு முன் செயல் அலுவலர் சுமதி, கோயிலில் உள்ள 1948ம் ஆண்டு வருட சொத்து பதிவேட்டை வைத்து கோயிலில் உள்ள சிலைகளை ஆய்வு செய்தார். அதில் சோமஸ்கந்தர், ஸ்கந்தர், பிரியாவிடை அம்மன், தனி அம்பாள், ஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, நித்திய உற்சவ சுவாமி, நித்திய உற்சவ அம்பாள் ஆகிய (உபயோகப்படாத சிலைகள்) பழமையான எட்டு சிலைகளை காணவில்லை என்பதை கண்டறிந்துள்ளார். காணாமல் போன இந்த 8 சிலைகள் குறித்து செயல் அலுவலர் சுமதி, சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு கண்காணிப்பாளர் சக்திவேலுக்கு புகார் மனு அனுப்பினார்.  சுமதி புகாரின் பேரில், காவல்துறை கூடுதல் இயக்குனர் அபய்குமார்சிங் மற்றும் காவல்துறை தலைவர் கணேசமூர்த்தி உத்தரவின் பேரில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். …

The post திருப்புத்தூர் அருகே இரணியூர் கோயிலில் 8 சிலைகள் மாயம்: சிலை திருட்டு தடுப்பு பிரிவில் புகார் appeared first on Dinakaran.

Related Stories: