5 ஆண்டுக்கு மேல் குடியிருந்தவர்களுக்கு வழங்க கோயில் நிலத்தை பட்டா போட தடை

சென்னை: கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற அரசாணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. சட்டவிரோதமாக நிலங்களை ஆக்கிரமிப்பவர்களுக்கு உதவும் வகையில் இந்த அரசாணை பிறபிக்கப்பட்டுள்ளதால், அரசாணையை ரத்து செய்யக் கோரி ராதா கிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ஆட்சேபம் இல்லாத அரசு புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கும் வகையில் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆட்சேபனைக்குரிய புறம்போக்கு மற்றும் கோயில் நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அதில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். கோயில் நிலங்களை பொறுத்தவரை மாவட்ட வாரியாக, கோயில் வாரியாக கருத்துருக்கள் வகுக்கப்பட்டு, அறநிலையத்துறை ஆணையர் மூலமாக அரசுக்கு அனுப்பி அதன் பிறகே முடிவெடுக்கப்படும். கோயிலுக்கு தேவைப்படாத நிலங்களை ஏழை மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்தும் அந்த நிலத்துக்கான விலையை கோயிலுக்கு வழங்குவது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த அரசாணை மத உணர்வுகளுக்கோ, பக்தர்களுக்கோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு பிறபித்த அரசாணை ஒரு மதத்திற்கான வழிபாட்டு தலங்களுக்கு மட்டுமா அல்லது எல்லா மத வழிபாட்டு தலங்களுக்குமா என்று நீதிபதிகள் கேட்டனர். அதற்கு அரசு பிளீடர் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குத்தான் என்றார். அப்போது, நீதிபதிகள், இந்த அரசாணையால் கோயில்கள் எப்படி பலனடையும், 38 ஆயிரம் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் எவ்வளவு, அதில் ஆக்கிரமிப்பில் இருக்கும் நிலங்கள் தொடர்பான விவரங்கள் இல்லாமல் அரசாணையை அமல்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பி அரசாணைக்கு தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், “ கோயில் நிலங்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் வசித்தவர்களுக்கு பட்டா வழங்க வகைசெய்யும் 2019 ஆகஸ்ட் 30ம் தேதியிட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. மேலும், தமிழகத்தில் கோயில்சொத்துக்களின்நிலங்கள் எவ்வளவு? அவற்றில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலங்கள் எவை? எந்த ஆண்டிலிருந்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது? ஆக்கிரமிப்பை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட துறை நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்று உத்தரவிட்டனர். வழக்கு 2020 ஜனவரி 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories: