காரைக்குடியில் வீதி முழுவதும் தண்ணீர் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மக்கள் தவிப்பு

* பரவி வரும் நோய்கள்

* கண்டுகொள்ளாத நகராட்சி

காரைக்குடி : காரைக்குடி காளவாய்பொட்டல் பகுதியில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாத அளவில், தெரு முழுவதும் குளம்போல் தண்ணீர் தேங்கி கிடப்பதால் பல்வேறு வகையான நோய்கள் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.காரைக்குடி 30வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இங்குள்ள காளயப்பா நகர் தந்தை பெரியார் தெருவில் நூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலை என்பதே கிடையாது. மண்ரோடு தான் உள்ளது.

மழை பெய்தால் தண்ணீர் வெளியேறுவதற்கு உரிய கால்வாய்கள் இல்லை. ஒவ்வொரு வருடமும் மழை பெய்யும் போதும் தண்ணீர் தேங்குவது வாடிக்கையாகி வருகிறது. அதுபோல இந்த வருடம் கடந்த சில மாதங்களாக மழை பெய்து வருவதை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வீதி முழுவதும் தண்ணீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. வீட்டுக்குள் இருந்து மக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர விஷ பூச்சிகள் வீட்டுக்குள் நுழைவதால் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்ந்து தண்ணீர் தேங்கி கழிவுநீர் போல மாறி துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. தவிர கிணறு, போர்வெல்களில் இந்த மழைநீர் இறங்கி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கி கிடப்பதால் கொசு தொல்லை அதிகமாக இருப்பதோடு காய்ச்சல் உள்பட பல்வேறு தெற்றுநோய் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் யாரும் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியை சேர்ந்த மீனாள் கூறுகையில், தண்ணீர் தேங்கி கழிவுநீர் போல் மாறி துர்நாற்றம் ஏற்பட்டு வருகிறது. கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதற்கு முன்பு தண்ணீர் தேங்கி கிடக்கும் போது மோட்டார் வைத்து தண்ணீர் வெளியேற்றுவார்கள். பின்னர் கண்டுகொள்வது இல்லை. இம் முறை மோட்டார் வைத்தும் தண்ணீர் வெளியேற்றாமல் அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர்.பாரதி கூறுகையில், இரண்டு மாதமாக தண்ணீர் தேங்கி கிடக்கிறது. ஒவ்வொரு வருடமும் மழைபெய்தால் எங்கள் பாடு திண்டாட்டம் தான். அதிகாரிகள் யாரும் வந்து பார்க்கவில்லை. பாம்பு போன்ற விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருகிறது. இன்னும் சில நாட்கள் தண்ணீர் தேங்கி கிடந்தால் வீட்டு சுவர்கள் இடிந்து விழுந்துவிடும்.

தனலட்சுமி கூறுகையில், தண்ணீரில் தத்தளித்து வருகிறோம். பள்ளி, கல்லூரிக்கு செல்ல முடியாமல் மாணவர்கள் அவதியடைந்து வருகின்றனர். சாலை வசதி, கால்வாய் வசதி இல்லை. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து குடியிருக்கவே முடியாத நிலையில் தவித்துவருகிறோம். சாலை அமைத்து எங்களுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும் என்றனர்.

Related Stories: