பாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டு செங்கல்பட்டு, புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

புதுச்சேரி: ஐ.ஐ.டி மாணவி பாத்திமா மரணத்திற்கு நீதி கேட்டு புதுவை மற்றும் செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி சட்டக்கல்லூரியில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிய பேருந்து நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஆணவ படுகொலையை தடுப்பதற்கு தனி சட்டம் இயக்க வேண்டும். மேலும் சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கில் காரணமான பேராசிரியரை கைது செய்யாமல் இருக்கும் தமிழக அரசை கண்டித்து மாணவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த இரண்டு சம்பவங்களும் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. எனவே இந்த சம்பவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் தமிழக மற்றும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் தமிழக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.

தற்போது அப்பகுதியில் பாதிக்கப்பட்ட போக்குவரத்தானது வெகுவாக சரிசெய்யப்பட்டு வருகிறது. சட்டக்கல்லூரி மாணவர்களின் இந்த போராட்டம் காரணமாக புதிய பேருந்து நிலையத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை போலவே செங்கல்பட்டிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் சட்டக்கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமானோர் சாலை மறியலில்  ஈடுபட்டுள்ளனர். ஐ.ஐ.டி மாணவி பாத்திமா தற்கொலை செய்து 2 வாரங்களுக்கு மேலாகியும் தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மறியலில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தொடர்ந்து மாணவி தற்கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவில்லை எனில், இப்போராட்டமானது மேலும் தொடரும் என மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: