தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் தடுப்பணை அதிமுக அரசு தடுக்காததை கண்டித்து 5 மாவட்டங்களில் திமுக ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை: தென்பெண்ணையாற்றின் குறுக்கே, கர்நாடக அரசு மேற்கொண்டுள்ள 5 திட்டப் பணிகளுக்கு தடை விதிக்க வலியுறுத்தி தமிழக அரசு சார்பில் எந்த காரணமும் சொல்லப் படவில்லை என்று கூறி உச்சநீதிமன்றம் கர்நாடகாவிற்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே, கர்நாடகம் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்துவதில் தோல்வி கண்டுள்ள தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் திமுக சார்பில் 21ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக தலைமை ஏற்கனவே அறிவித்தது. அதன்படி 5 மாவட்டங்களிலும் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாசிலை எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சிவானந்தம், எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழுப்புரம், கிருஷ்ணகிரி:  விழுப்புரம் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் முன்பு கொட்டும் மழையில் மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. எம்எல்ஏக்கள் மஸ்தான், உதயசூரியன், வசந்தம்கார்த்திகேயன், சீத்தாபதிசொக்கலிங்கம், மாசிலாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணகிரியில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை எதிரில், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ தலைமையில் ஆர்பாட்டம் நடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி எம்எல்ஏ தலைமையிலும், கடலூரில் தலைமை தபால் நிலையம் அருகில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் எம்எல்ஏ தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: