வயநாட்டில் பரிதாபம் வகுப்பில் பாம்பு கடித்து 5ம் வகுப்பு மாணவி பலி: பள்ளியில் வன்முறை; ஆசிரியர் சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் சுல்தான்பத்தேரி அருகே புத்தன்குந்நு பகுதியை சேர்ந்தவர் அப்துல் அஸீஸ். இவரது மகள் ஷஹ்லா ஷெரின் (10). அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வகுப்பறையில் அமர்ந்து இருந்தார். அப்போது சுவரோடு சேர்ந்துள்ள ஒரு ஓட்டையில் இருந்த பாம்பு மாணவியின் காலில் கடித்துள்ளது. இதை ஷஹ்லா ஷெரின் கவனிக்கவில்லை. சிறிது நேரம் கழித்து காலில் இருந்து ரத்தம் வருவதை கவனித்தார். உடனே ஆசிரியரிடம் கூறியுள்ளார். தொடர்ந்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு பதற்றம் அடைந்த பெற்றோர் பள்ளிக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் ஷஹ்லா ஷெரினை மீட்டு பத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு எதுவும் கண்டுபிடிக்க முடியாததால் பத்தேரி அரசு மருத்துவமனைக்கும் பின்னர்  கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியில் மாணவிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சேலோடு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது மாணவியை பாம்பு கடித்துள்ளதை டாக்டர்கள் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கள் மாணவி உயிரிழந் தார். இது குறித்து அறிந்ததும் வயநாடு மாவட்ட கல்வித்துறை துணை இயக்குனர் இப்ராகீம் ஆசிரியர் ஷஜிலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதற்கிடையே மாணவியின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டு பேராட்டம் நடத்தினர். தொடர்ந்து ஆசிரியர்கள் அறையை அவர்கள் அடித்து நொறுக்கினர்.

கேரள முதல்வருக்கு ராகுல் காந்தி கடிதம்

கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு வயநாடு தொகுதி எம்.பி.யான ராகுல் காந்தி அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘மாணவி ஷஹ்லா ஷெரின் வகுப்பறையில் பாம்பு கடித்து இறந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பழமையான அந்தப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என அறிந்தேன். எனவே கேரள அரசு உடனடியாக செயல்பட்டு அப்பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் மாணவியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு கேரள அரசு தேவையான நிவாரண உதவி வழங்க வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories: