வடமாநில ரயில்களில் தொடரும் பாதுகாப்பு குறைபாடு ஓடும் ரயிலில் முகமூடி அணிந்து கத்திமுனையில் நகை, பணம் பறிப்பு

* சிசிடிவி காட்சி பெற்று போலீஸ் விசாரணை

* ரயிலில் சினிமா காட்சிபோல் பரபரப்பு

சென்னை:  சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏறிய முகமூடி கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் பறித்து சென்றது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, உத்தரபிரதேசம், பெங்களூரு, ஜெய்ப்பூர் போன்ற பகுதிகளுக்கும், திருப்பூர், கோவை, ஊட்டி, ஈரோடு, சேலம் போன்ற பகுதிகளுக்கும் தினமும் 15க்கும் மேற்பட்ட ரயில்கள்  இயக்கப்படுகிறது. கடந்த 2016ம் ஆண்டு சென்னை-சேலம் விரைவு ரயிலில் மேற்கூரையை துளையிட்டு ₹5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்தி இன  கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங், தினேஷ், ரோஹன் உள்பட 7 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு நேற்று மீண்டும் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது பயணிகள் மத்தியில் அச்சத்தை  ஏற்படுத்தியுள்ளது.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 5.45 மணிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஜெய்ப்பூருக்கு புறப்பட்டது. சென்ட்ரல் நிலையத்திற்கும், பேசின்பிரிட்ஜ்க்கும் இடையே ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது  வடமாநிலத்தை சேர்ந்த 6 கொள்ளையர்கள் முகத்தில் துணியை கட்டிக்கொண்டு திடீரென்று ரயில் என்ஜினுக்கு அடுத்து உள்ள முன்பதிவில்லா பெட்டியில் ஏறியுள்ளனர். அவர்களை கண்டதும் பயணிகள் அலறியடித்து சத்தம் போட்டனர்.

உடனே கொள்ளையர்கள் கத்தியை காட்டி பயணிளை மிரட்டினர். கத்தினாலோ அல்லது போலீசுக்கு தகவல் கொடுத்தாலோ கொன்று விடுவோம் என மிரட்டியிருக்கின்றனர். பயத்தில் பயணிகள் என்னசெய்வதென்று தெரியாமல் திருதிருவென  விழித்தனர். அவர்களை மிரட்டி ₹20 ஆயிரம் பணம், மோதிரம், 3 செல்போன் மற்றும் இரண்டு நபர்களிடம் இருந்து 6 சவரன் நகை ஆகியவற்றை பறித்துக் கொண்டனர்.பின்னர் அவர்கள் ரயில் திருவொற்றியூர் அடுத்து விம்கோ நகர் ரயில் நிலையம் வருவதற்கு முன்பாக காட்டுப்பகுதியில் ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். உடனே ரயில் ஓட்டுநர் ஏதோ அசாம்பாவித சம்பவம் நடந்திருக்கிறது  என்று நினைத்து ரயிலை நிறுத்தியுள்ளார். உடனே கொள்ளையர்கள் ரயிலை விட்டு இறங்கி ஒரு பக்கம் இரண்டு பேரும், மற்றொரு பக்கம் 4 பேரும் ஓடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பயணிகள் அவசர எண் 100க்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் கொருக்குப்பேட்டை ரயில்வே இன்ஸ்பெக்டர் சசிகலாவுக்கு தகவல் தரப்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனே விரைந்து வந்த இன்ஸ்பெக்டர்  கொள்ளை சம்பவம் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தினார். அதன்பிறகு ரயில் புறப்பட்டு சென்றது. நகை, பணத்தை இழந்தவர்கள் ஜெய்ப்பூர் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறி அதே ரயிலில் அனுப்பி வைத்தனர்.

பின்னர் கொள்ளை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள், கம்பெனிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தபோது அதில் 4 கொள்ளையர்கள் முகத்தை மூடிக்கொண்டு ஓடுவதுபோல் காட்சி  பதிவாகியிருந்தது. மற்ற இரண்டு நபர்கள் வேறு பக்கம் ஓடியதால் அவர்கள் செல்லும் காட்சி பதிவாகவில்லை, இதையடுத்து அந்த காட்சிகளை பெற்று இன்ஸ்பெக்டர் சசிகலா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், ‘பணம், நகைளை தவறவிட்டவர்களிடமிருந்து புகார் மனுக்கள் வந்தவுடன் உரிய விசாரணை நடத்தப்படும்’ என இன்ஸ்பெக்டர் தெரிவித்தார்.

இதேபோல்  நேற்று முன்தினம்  இரவு  சென்ட்ரலிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் சென்றது. அந்த மின்சார ரயிலில் 6 கொள்ளையர்கள் ஏறி தண்டையார்பேட்டை ரயில் நிலையம் செல்லும்போது, பயணிகளிடம்  கத்தியை காட்டி  மிரட்டி செல்போன், ₹5ஆயிரம் பணத்தை பறித்துக்கொண்டு அந்தக்கும்பல் தப்பியோடியது. இதுகுறித்து ரயிலில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த சோமசுந்தரம் (36) என்பவர் புகார் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார்.  புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து ரயிலில் ஏற்பட்ட கொள்ளை சம்பவம் ரயில் பயணிகளிடையே பயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையர்கள் திருவொற்றியூர் அடுத்து விம்கோ நகர் ரயில் நிலையம் வருவதற்கு முன்பாக ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்தனர். பின்னர் தப்பியோடினர்

Related Stories:

>