சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படுமாஎன்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்க மத்திய அரசு மறுப்பு

டெல்லி : சாவர்க்கருக்கு பாரத ரத்னா வழங்கப்படுமா என்ற கேள்விக்கு நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேரடியாக பதில் அளிக்க மறுத்து இருப்பது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதாவைச் சேர்ந்த வடக்கு மும்பை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கோபால் ஷெட்டி, மக்களவையில் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளது. பாரத ரத்னா விருது வழங்க அதிகாரப்பூர்வ பரிந்துரை ஏதும் தேவையில்லை. விருது வழங்குவது குறித்து அந்தந்த நேரங்களில் தான் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சாவர்க்கரின் பேரன் ரஞ்சித், அரசே முன்வந்து விருது தருவது தான் தங்களுக்கு மரியாதை என்று கூறியுள்ளார். தீவிர வலதுசாரியும் இந்துத்துவா கொள்கையாளருமான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்பது சிவசேனா, பாஜக கட்சிகளின் கோரிக்கையாகும். நடந்து முடிந்த மராட்டிய சட்டப்பேரவை இதனை தேர்தல் அறிக்கையிலும் பாஜக குறிப்பிட்டது. தற்போது இது குறித்த கேள்விக்கு மத்திய அரசு நேரடியாக பதில் அளிக்காதது வரும் குடியரசு தின விழாவில் சாவர்க்காருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: