ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 16 ஊழியர்கள், மூன்று கப்பல்களைக் கடத்தினர்

ஏமன்: ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் பகுதியில் 16 ஊழியர்களையும் மூன்று கப்பல்களையும் கடத்தியதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் தரப்பில் செங்கடலின் தென்பகுதியில் மூன்று கப்பல்களை ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடத்தியுள்ளனர். கடத்தப்பட்ட கப்பல்களில் ஒன்று சவுதியைச் சேர்ந்தது மற்ற இரண்டு கப்பல்கள் தென்கொரியாவுக்குச் சொந்தமானவையாகும்.

மேலும் கப்பலில் இருந்த 16 ஊழியர்களையும் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடத்தியுள்ளனர். அவர்களில் 2 பேர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள். எங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை விடுவிக்க நாங்கள் போதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கடத்தல் குறித்து சவுதி தெற்கு செங்கடலில் டக்போட் ரபீ கப்பல் ஆயுதம் தாங்கிய ஏமன் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டது. வளைகுடாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நீரிணைப்புப் பாதையில் நடத்தப்பட்டுள்ள இந்தச் சம்பவம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது. இதில் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: