அகமதாபாத் ஆசிரமத்தில் நித்தியானந்தாவிடம் இருந்து மகளை மீட்டு தரக்கோரி தந்தை வழக்கு: குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்,.. போலீசாரும் பல பிரிவுகளில் எப்ஐஆர்

அகமதாபாத்,: ‘அகமதாபாத்தில் சாமியார் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டிருக்கும் தன் மகளை மீட்டு ஆஜர்படுத்த வேண்டும்,’ என்று கோரி, அந்த பெண்ணின் தந்தை குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார். பெங்களூரு சேர்ந்தவர்கள் ஜனார்த்தன் சர்மா, இவரது மனைவி உமேஷ்வரி. இவர்களுக்கு 19, 15 வயதுகளில் மகள்களும், 13 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஜனார்த்தன் பெங்களூருவில் உள்ள நித்தியானந்தாவின் ஆசிரமத்துக்கு சென்று வந்தபோது, குழந்தைகளையும் அழைத்து சென்றுள்ளார். அப்போது, சேவை செய்வதற்காக ஜனார்த்தனின் மகள்களும், மகனும் நித்தியானந்தா ஆசிரமத்திலேயே தங்கி விட்டதாக தெரிகிறது. ஒருகட்டத்தில் ஜனார்த்தன் சென்று அழைத்துபோது, 3 பிள்ளைகளும்  வீட்டுக்கு வர மறுத்துவிட்டனர். மேலும், ஆசிரமத்தில் இருந்தவர்கள் இவர்களை விரட்டி விட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஜனார்த்தனின் மகள்களும், மகனும், குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் புறநகரில் உள்ள ஹிராபூரில் உள்ள நித்தியானந்தாவுக்கு சொந்தமான யோகினி சவாஜ்னாபீடம் ஆசிரமத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தன்னுடைய குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்த ஆசிரமத்துக்கும் சென்று ஜனார்த்தன் கேட்டபோது, அவரை ஆசிரமத்தில் இருந்தவர்கள் எதுவும் சொல்லாமல் விரட்டியடித்து விட்டனர்.  இதையடுத்து, அவர் கடந்த 2ம் தேதி குஜராத் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பிடம் புகார் அளித்தார். அவர்கள் போலீசாருடன் சென்று, நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் இருந்த அவரது 15 வயது மகளையும், 13 மகனையும் மீட்கப்பட்டனர். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜனார்த்தன் அகமதாபாத் விவேகானந்தா நகர் போலீஸ் ஸ்டேஷனில் தனது பிள்ளைகள்  கடத்தப்பட்டதாக புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அகமதாபாத் புறநகர் போலீஸ் எஸ்.பி. ஆர்.வி.ஆசாரி கூறுகையில், ‘‘சாமியார் நித்தியானந்தா, அவரது உதவியாளர்கள் பிரியாதத்வா, பிரான்ப்ரியா ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகள் 365(கடத்தல்), 344 (10 நாட்களுக்கு மேல் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல்), 323 (வேண்டுமென்றே குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல்), 504 (அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்தில் நடந்து கொள்ளுதல்), 114 (குற்றத்துக்கு துணை புரிதல்), 506(2) (குற்ற உள்நோக்கம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளை ஆசிரமத்தில் உள்ளவர்கள் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாக அவர்களது பெற்றோர்கள் தெரிவித்ததால், குழந்தைகளை பாதிப்பு ஏற்படுத்துதல் பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது,’’ என்றார்.

 தற்போது, ஆசிரமத்தில் இருக்கும் 19 வயது மூத்த மகளை மீட்டுத்தரக் கோரி அகமதாபாத் உயர் நீதிமன்றத்தில் ஜனார்த்தன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்துள்ளார்.  இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘‘எனது மகளை சந்திக்க ஆசிரமத்தில் உள்ளவர்கள் அனுமதிக்கவில்லை.என் மகளின் வீடியோவை மட்டும் வேண்டும் என்றே சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அவர் தானே விருப்பப்பட்டுதான் ஆசிரமத்தில் இருப்பதாக வீடியோவில் தெரிவித்துள்ளார். அப்படி என்றால், அவரை சந்திக்க எங்களுக்கு அனுமதி மறுப்பது ஏன்? மகளை மீட்டுஆஜர்படுத்தக் கோரி வழக்கு தொடர்ந்துள்ளேன்,’’ என்றார்.

‘ஆசிரமத்தில்தான் இருப்பேன்’

 ஜனார்த்தனின் மூத்த மகள் நித்தியானந்திதா வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், ‘‘நித்தியானந்தா சுவாமிகளின் ஆசிரமத்தில் என் சுய விருப்பத்தின் பேரில்தான் தங்கி உள்ளேன். என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை. என் பெற்றோரை சந்திக்க நான் விரும்பவில்லை. நான் ஆன்மிக பாதையை தேர்ந்தெடுத்து விட்டேன். சுவாமிகளின் வழிப்படி நடப்பேன்,’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: