மகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம்: காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை

டெல்லி: மகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜ, சிவசேனா கட்சிகளுக்கு முறையே 105, 56 என மொத்தம் 161 இடங்கள் கிடைத்தன. ஆனால், முதல்வர் பதவி தொடர்பான மோதல் காரணமாக பாஜ-சிவசேனா கூட்டணி முறிந்தது. இதனால் கடந்த 12ம் தேதி முதல் ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.இந்நிலையில், 54 இடங்களில் வென்ற தேசியவாத காங்கிரஸ் மற்றும் 44 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க சிவசேனா தீவிர முயற்சி மேற்கொண்டது. மூன்று கட்சித் தலைவர்களும் பலமுறை சந்தித்து பேசினர்.

இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு, புதிதாக அமையும் கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் வரைவு திட்டமும் தயாரிக்கப்பட்டு விட்டது. ஆனாலும், ஆட்சியமைப்பது தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இதனிடையே டெல்லியில் நேற்று மாலை சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சரத் பவார் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் பேசினார். அதன் பிறகு பேட்டியளித்த சரத் பவார், ‘‘மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து சோனியாவிடம் பேசினேன். ஆனால், கூட்டணி ஆட்சி தொடர்பாக அவரிடம் நான் எதுவும் பேசவில்லை. மகாராஷ்டிராவின் அரசியல் நிலவரத்தை தொடர்ந்து தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறோம்.

அடுத்து என்ன செய்வது என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள்’’ என்றார். இந்நிலையில் மகாராஷ்ட்டிரா அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அகமது பட்டேல், ஏ.கே.அந்தோனி மற்றும் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோருடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார்.

Related Stories: