தேசியவாத காங்கிரசிடம் பாடம் கற்க வேண்டும் : பிரதமர் மோடி பேச்சு

மாநிலங்களவைக்கு இது 250வது கூட்டம். இதை முன்னிட்டு பிரதமர் மோடி மாநிலங்களவையில் நேற்று பேசியதாவது: மாநிலங்களவையில் நிறைய, பயனுள்ள விவாதங்கள் நடைபெற வேண்டும். இது சோதனைகள் செய்து, சமநிலையை ஏற்படுத்தும் இடம். இது நமது ஜனநாயகத்துக்கு முற்றிலும் அவசியமானது. அதே நேரத்தில் சோதிப்பதற்கும், தடை ஏற்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. மாநிலங்களவை 2வது அவையாக இருக்கலாம். ஆனால் இதை யாரும் இரண்டாம்தர அவையாக நினைக்க கூடாது. நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிக்கும் அவையாக மாநிலங்களவை இருக்க வேண்டும் என வாஜ்பாய் கூறியதை இன்று நான் நினைவுபடுத்துகிறேன். அவையில் இடையூறுகள் ஏற்படக் கூடாது. இன்று நான் 2 கட்சிகளை பாராட்ட விரும்புகிறேன். நாடாளுமன்ற விதிமுறைகளை சரியாக பின்பற்றும் கட்சிகள் தேசியவாத காங்கிரசும், பிஜூ ஜனதா தளமும்தான். இந்த கட்சி எம்.பிக்கள் ஒரு போதும் அவையின் மையப் பகுதிக்கு சென்றதில்லை. ஆனாலும், அவர்கள் தங்களின் கருத்துக்களை வலுவாக தெரிவித்துள்ளனர். இவர்களின் நடைமுறைகளில் இருந்து நாம் அதிகம் கற்க வேண்டும். மாநிலங்களின் நலனுக்காக நாம் பணியாற்ற நமது அரசியல்சாசனம் ஊக்குவிக்கிறது. கூட்டாட்சி ஒத்துழைப்பு உணர்வுடன் மாநிலங்களவை நம்மை செயல்பட வைக்கிறது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து தொடர்பான 370 மற்றும் 35(ஏ) சட்ட மசோதாக்கள் நிறைவேற்றபட்டபோது, மாநிலங்களவையின் பங்கை யாரும் மறக்க முடியாது. அதிக ஒற்றுமையுடன் இந்த அவை பணியாற்றியுள்ளது. நாட்டு நலனில் மாநிலங்களவை வலுவான பங்களிப்பை அளித்துள்ளது. இங்கு முத்தலாக் மசோதா நிறைவேறாது என நம்பப்பட்டது. ஆனால் நிறைவேறியது. இங்கு நிறைவேறியதால்தான் ஜிஎஸ்டியும் அமலானது. தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படாதவர்களும், நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற மாநிலங்களவை வாய்ப்பளிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்காக மாநிலங்களவை மூலம் அம்பேத்கர் ஆற்றிய பங்கை யாரால் மறக்க முடியும். மக்களவையில் இருந்து அவர் தேர்வு செய்யப்பட ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. மாநிலங்களவை நிலையானது. நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு, மாநிலங்களவை முக்கியத்துவம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். மகாராஷ்டிராவில் பா.ஜ கூட்டணியில் இருந்து விலகிய சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முயற்சிக்கும் சூழலில், தேசியவாத கட்சியை பிரதமர் மோடி புகழ்ந்தது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.

Related Stories: