பஞ்சாபில் இருந்து திருவண்ணாமலைக்கு 2,600 டன் கோதுமை சரக்கு ரயிலில் வருகை

திருவண்ணாமலை :  பஞ்சாப் மாநிலத்தில் இருந்து 2,600 டன் கோதுமை சரக்கு ரயில் மூலம் திருவண்ணாமலைக்கு கொண்டுவரப்பட்டது. ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல், குடும்ப அட்டைதாரின் ஒரு விருப்புரிமை தானியமாக கோதுமையை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டது. அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ ரேஷன் அரிசியில், 5 கிலோ குறைத்து 15 கிலோ அரிசி மற்றும் அரிசிக்கு பதில் 5 கிலோ கோதுமையை நுகர்வோர் கேட்டால் இலவசமாக வழங்கப்படும். மாதந்தோறும் அரிசி அல்லது கோதுமை எதை விரும்புகிறார்களோ அதை வாங்கிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கோதுமை அதிக அளவு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு வழங்க, பஞ்சாப் மாநிலம் பரித்கோட் பகுதியிலிருந்து 2,600 டன் கோதுமை சரக்கு ரயில் மூலம் நேற்று திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது. பின்னர், அங்கிருந்து சரக்கு லாரிகள் மூலம் திருவண்ணாமலை அடுத்த புதுமன்னை கிராமத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்கிருந்து மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு தேவையான அளவு கோதுமை பிரித்து அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: