நாகர்கோவில், களியக்காவிளையில் நெடுஞ்சாலை சீரமைப்பு கோரி மறியல் எம்.பி., 3 எம்எல்ஏக்கள் கைது

நாகர்கோவில் : தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி நாகர்கோவில் மற்றும்  களியக்காவிளையில் நேற்று நடந்த மறியல் போராட்டத்தில் வசந்தகுமார்  எம்.பி, 3 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 400 பேரை போலீசார் கைது செய்தனர். களியக்காவிளையில்  இருந்து காவல்கிணறு வரையிலான தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததை கண்டித்து  நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று  காங்கிரஸ் கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. வசந்தகுமார் எம்.பி தலைமை வகித்தார். பிரின்ஸ் எம்.எல்.ஏ,  குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன்  முன்னிலை வகித்தனர்.  போராட்டத்தில் ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

கோட்டப்பொறியாளர் ஜெகன்மோகன் மற்றும் அதிகாரிகள் வசந்தகுமார் எம்.பி.யிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது அவர்கள்  பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து  வருகிறோம் என்றனர். கண்காணிப்பு பொறியாளர் வந்து உறுதியளிக்க கோரி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டதால் வசந்தகுமார் எம்.பி, பிரின்ஸ் எம்.எல்.ஏ உட்பட 250 பேரை போலீசார்  கைது செய்தனர். களியக்காவிளையில் நடந்த  மறியலில் பங்கேற்ற எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், விஜயதரணி உட்பட 150 பேர் கைது செய்யப்பட்டனர். தேசிய  நெடுஞ்சாலை முழுவதும் மரண குழிகளாக இருப்பதை சுட்டிக்காட்டும் வகையிலும்,  அடிக்கடி விபத்துகளால் உயிரிழப்பு ஏற்படுவதை கண்டித்தும் களியக்காவிளையில் கட்சி தொண்டர் ஒருவரை பாடையில் ஏற்றி நான்கு பேராக தூக்கி மறியல் நடந்த இடத்துக்கு கொண்டுவந்தனர். பின்னர் பாடையை நடுவில் வைத்து போராட்டம் நடத்தினர்.

Related Stories: