மேற்கு வங்க ஆளுநர் ஆவேசம் சிலர் வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசுகின்றனர் : மம்தாவுடன் முற்றுகிறது மோதல்

கொல்கத்தா:  “சிலர் வாய்க்கு வந்தப்படி எல்லாம் பேசுகிறார்கள். அவர்கள் என்ன பேசினாலும், நான் மக்களுக்கு சேவை செய்வதை தடுக்க முடியாது,” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தாவை குறிப்பிட்டு ஆளுநர் ஜக்தீப் தன்கார் கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், ஆளுநர் ஜக்தீப் தன்கார் இடையே தொடர்ந்து பல்வேறு விவகாரங்களில் மோதல் நிலவி வருகின்றது. நேற்று முன்தினம்   மம்தா அளித்த பேட்டியில், ‘அரசியல் சாசன பதவிகளில் இருப்பவர்கள் மத்திய அரசின் ஊதுகுழலாக இருக்கிறார்கள், அவர்கள் அரசுக்கு இணையாக மற்றொரு அரசு நிர்வாகத்தை நடத்த விரும்புகின்றனர்,” என ஆளுநரை மறைமுகமாக விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆளுநர் ஜக்தீப் தன்கார் நேற்று அளித்த பேட்டியில், ‘‘சிலர் தங்களின் விருப்பத்துக்கு ஏற்றார்போல வாய்க்கு வந்தபடி பேசுகின்றனர்.

கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்தையும் விளையாட வேண்டும் என அவசியம் இல்லை. நான் தொடர்ந்து மாநில மக்களுக்கு சேவையாற்றுவேன். எனது பேச்சுக்களை சரியாக புரிந்து கொள்ளாமல் யாரும் கருத்து கூற வேண்டாம். 300 கிமீ தொலைவு பயணத்துக்காக அரசிடம் ஹெலிகாப்டர் கேட்டிருந்தேன். ஆனால், அரசு இதற்கு சரியாக பதிலளிக்கவில்லை,” என்றார். இந்த வார தொடக்கத்தில் நாடியா மாவட்டத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்பதற்காக அரசிடம் ஹெலிகாப்டர் வேண்டும் என்று ஆளுநர் தன்கார் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், ‘இது, அரசு பணத்தை வீணடிக்கும் செயல்,’ என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்தது. இதேபோல், நேற்று முன்தினமும் முர்ஷிதாபாத்தில் உள்ள பராக்காவில் நடக்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் தன்கார் ஹெலிகாப்டர் கேட்டு மாநில அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால், இதையும் அரசு நிராகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: