ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில், ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆக. 21ம் தேதி சிபிஐ அமைப்பால் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில்  கைது செய்யப்பட்டார். சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திகார் சிறையில் அடைக்கப்பட்ட ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், ப.சிதம்பரத்தை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கடந்த அக். 16ம் தேதி மீண்டும் கைது செய்தனர்.

அமலாக்கப் பிரிவு காவல் முடிந்த நிலையில் கடந்த 13ம் தேதி வரை ப.சிதம்பரத்தை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றக் காவல் முடிந்த நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ப.சிதம்பரத்துக்குக் காவலை வரும் 27ம் தேதி வரை நீட்டித்துச் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே ப.சிதம்பரம் தனது உடல்நலக் குறைவைக் காரணம் காட்டி தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரின் வழக்கறிஞர் கபில் சிபல் மூலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது அமலாக்கப் பிரிவு, ப.சிதம்பரம் தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில் சிதம்பரம் ஜாமீன் மனு மீது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ் கெய்த், ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளார். பொருளாதார குற்றத்தை தீவிரமாக கருத வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார். இதனிடையே ஏற்கனவே ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: