மகாராஷ்டிராவில் புதிய திருப்பம் காங், தேசியவாத காங், சிவசேனா ஆட்சியமைக்க உரிமை கோர முடிவு : விஜய் வட்டேத்திவர் தகவல்

மும்பை: மகாராஷ்டிராவில் புதிய கூட்டணி அரசு அமைப்பதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த சந்திப்பின்போது கூட்டணி அரசின் குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டதாகவும், விரைவில் ஆட்சியமைக்க உரிமை கோரப்படும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் விஜய் வட்டேத்திவர் நேற்று மாலை தெரிவித்தார். மாநிலத்தில் தற்போது ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவுடன் புதிய கூட்டணி அரசு அமைக்க சிவசேனா தீவிரமாக முயன்று வருகிறது. புதிய அரசு அமைப்பதற்கான குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க மூன்று கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் இதற்காக கூட்டுக்குழு ஒன்றை அமைத்துள்ளன. இந்த நிலையில், குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்குவதற்காக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சி தலைவர்கள் நேற்று பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோரின் ஒப்புதலுக்கு பிறகுதான் குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நேற்று மாலை நடந்த மூன்று கட்சித் தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு பேட்டியளித்த மூத்த காங்கிரஸ் தலைவர் விஜய் வட்டேத்திவர், ‘‘நாங்கள் பலமுறை சந்தித்து பேசினோம். இதில் கிட்டத்தட்ட குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிக்கப்பட்டு விட்டது. எனினும் எங்கள் கட்சித் தலைமைகள் ஒப்புதல் அளித்த பிறகுதான் குறைந்தபட்ச செயல் திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படும். இன்றைய பேச்சுவார்த்தை மிக சுமூகமாக நடந்தது. விரைவிலேயே இந்த கூட்டணி ஆட்சியமைக்க உரிமை கோரும். விவசாயிகள் பிரச்னை, வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார மந்தநிலை போன்ற பல பிரச்னைகளில் காங்கிரஸ் நிலைப்பாட்டுடன் சிவசேனாவும் ஒத்துப்போகிறது’’ என்றார். கடந்த சில நாட்களாக மகாராஷ்டிராவின் அரசியல் களம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. ஆனால் அதுபோல அல்லாமல் நேற்றைய பேச்சுவார்த்தைகள் மிகவும் சாதாரணமான முறையிலேயே நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் நேற்று முன்தினம் இரவு தனது கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாகவும் தாம் சொந்த ஊரான பாராமதி செல்வதாகவும் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதனால், குறைந்தபட்ச செயல் திட்டம் தயாரிப்பதில் காங்கிரசுக்கும் தேசியவாத காங்கிரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக செய்தி பரவ ஆரம்பித்தது. ஆனால், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பின்னர் நிருபர்களை சந்தித்தபோது, மீடியாக்களை தவிர்ப்பதற்காக அஜித் பவார் வேண்டுமென்றேதான் அவ்வாறு கூறியதாகவும் கூட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். பெயர் வெளியிட விரும்பாத தலைவர் ஒருவர் இது குறித்து கூறும்போது, “மீடியாக்களை தவிர்க்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் வேண்டுமென்றேதான் பொய் கூறினார்கள். கூட்டம் தற்போது நடந்து வருகிறது” என்றார்.

முன்னரே எழுதப்பட்ட திரைக்கதை

சிவசேனா கட்சிப்பத்திரிகையான சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: மகாராஷ்டிராவில் கண்ணுக்கு தெரியாத ஏதோ ஒரு அதிகாரம்தான், விளையாட்டின் பின்னணியில் இருந்திருக்கிறது. அந்த கண்ணுக்கு தெரியாத அதிகாரத்தின் விருப்பப்படியே முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே எழுதப்பட்ட திரைக்கதையின் அடிப்படையிலேயே மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>