தூத்துக்குடியில் 3 மாவட்ட ஆய்வு கூட்டம் அதிகாரிகள் தெளிவுபெற்றால்தான் நேர்மையாக தேர்தல் நடத்த முடியும்: மாநில தேர்தல் ஆணையர் பேச்சு

தூத்துக்குடி: உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான சந்தேகங்களில் அதிகாரிகள் தெளிவு பெற்றால்தான் நேர்மையான தேர்தலை நடத்த முடியும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை டிசம்பரில் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் தொடங்கியுள்ளது. இதைதொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி அந்தந்த மாவட்டங்களில் நடந்து வருகிறது. தூத்துக்குடி, நெல்லை,  கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம், தேர்தல் தொடர்பான பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநில தேர்தல் ஆணையர்  பழனிசாமி தலைமை வகித்து பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் பட்டியலைத்தான் பயன்படுத்த உள்ளோம். அதில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கம், இடம்பெயர்தல் உள்ளிட்டவை இடம்பெற்றால்  ஆணையத்தின் அறிவுரையின்படி மாற்றப்படும்.

கூட்டத்தில் எந்த சந்தேகத்தையும் கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் நேர்மையான, தெளிவான தேர்தலை நடத்த முடியும். உள்ளாட்சி தேர்தல் சட்டமன்ற தேர்தலை போல் கிடையாது. 10 லட்சத்திற்கும் அதிகமானோர்  போட்டியிடுவர். இவர்களை  திறம்பட கையாண்டு தேர்தலை நடத்த வேண்டிய பொறுப்பு தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கு உள்ளது என்றார்.கூட்டத்தில் கலெக்டர்கள் தூத்துக்குடி சந்தீப்நந்தூரி, நெல்லை ஷில்பா பிரபாகர் சதீஷ், கன்னியாகுமரி பிரசாந்த் வடநேரே, தூத்துக்குடி எஸ்பி அருண் பாலகோபாலன் மற்றும் அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: